ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்

பதிகங்கள்

Photo

சத்தின் நிலையினில் தானான சத்தியும்
தத்பரை யாய்நிற்கும் தான்ஆம் பரற்குடல்
உய்த்தகும் இச்சையில் ஞானாதி பேதமாய்
நித்தம் நடத்தும் நடிக்கும் மா நேயத்தே.

English Meaning:
Sakti Manifestations

From Sat (Siva) arose of Herself, Sakti,
In that She as Tat-Parai stands;
In the Ichcha (Desire) State
She Para`s Form material is;
Then Jnana Sakti and other forms
She assmes;
Thus acting in love surpassing
She daily, daily moves this world.
Tamil Meaning:
`தத்` பதப் பொருளாகிய சிவன், தனது உண்மை நிலையில் உள்ள பொழுது அவனின் வேறாகாது அவனோடு ஒன்றாகியே நிற்கும் சத்தியும், `பரை` என நிற்கும். அஃதாவது யாதொன்றனையும் பற்றாது, தான் தனியே மேலானதாய் நிற்கும் என்பதாம். ``சத்தியும்`` என்னும் உம்மையால், சத்தியையுடைய சத்திமானாகிய சிவனும் அப்பொழுது `பரன்` என நிற்றல் பெறப்பட்டது. `பரசிவனாய் நிற்பன்` என்க. அந்தச் சத்தியே சிவனுக்கு வடிவம். என்றது, `சிவம் சத்தியே மயமானது` என்றபடி. இனி அந்தச் சத்தி, அருள் காரணமாக உயிர்களின் பொருட்டு ஐந்தொழிலாகிய நாடகத்தை மேற்கொண்டு செய்யும் பொழுது, தன்னிச்சையாகவே இச்சை, ஞானம், கிரியை முதலிய வகைகளாய்ப் பலவாகி, அவ்வைந் தொழிலை இடையறாது நடத்தும்.
Special Remark:
``தத்`` என்பதை முதலிற் கொள்க. `சத்து, உண்மை` என்பன ஒரு பொருட்சொற்கள். இதுவே, `சொரூபம்` எனப்படும். `பரம்பொருள் எவ்வாற்றானும் இருமையையுடையதன்று; முற்றிலும் ஒருமையையே உடையது` என்பர் மாயாவாதிகள். `அவ்வாறன்றிப் பரம்பொருள் பொருளால் ஒன்றாயினும், குண குணித் தன்மையால் `சிவம், சத்தி` எனத்தன்னுள் இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் இயைந்து நிற்கும்` என்பது சித்தாந்தம். இது, ஞாயிறு பொருளால் ஒன்றாயினும் குணகுணித் தன்மையால், `கதிரவனும், கதிரும்` எனத் தன்னுள் இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் இயைந்து நிற்றல் போல்வதாகும்.
சிவன் உயிர்களையும், மாயையையும் ஒரு கருத்துப் பற்றிச் சிறப்பாக நோக்காது, பொதுவாக அறிந்து மட்டும் நிற்றலே அவனது `தன்னியல்பு`, அல்லது `சொரூப லக்கணம்` எனப்படும். அந்நிலையில் அவன் `பர சிவன்` அல்லது `பரம சிவன்` எனப்படுவான். `சுத்த சிவன்` என்றும் சொல்வதுண்டு. அப்பொழுது அவனது சத்தியும் `பராசத்தி` எனப்படும். பரா - மேலானவள் அந்நிலையில் சத்தி செயலாற்றுதல் இல்லை. இதனையே, சத்தின் நிலையினில் தானான சத்தியும் - பரையாய் நிற்கும் என்றார். `இன்` வேண்டாவழிச் சாரியை. ``தானான`` என்றது `தாதான்மியமான` என்றபடி. `பரா` என நின்ற சத்தி உயிர்களின் பொருட்டு ஐந்தொழில் செய்ய விரும்பிமாயையைக் காரியப்படுத்த நினைக்கும் பொழுது அதில் ஒரு சிறிய கூறு, (`ஆயிரத்தில் ஒரு கூறு` என்பர்.) `ஆதி சத்தி` எனப் பிரிந்து நிற்கும். இஃது உயிர்களை கன்மம் மாயைகளினுட் செலுத்தலால், `திரோதான சத்தி` எனப்படும். திரோதானகரி, `திரோதாயி` என்னும் பெயர்களாலும் குறிக்கப்படும். மலங்களின் வழி நிற்றல் பற்றி, இதனையும் `ஒரு மலம்` என்று உபசரித்துக் கூறுவர். இவ்வாறு `ஆதி` என நின்ற அது பின், `ஞானம், இச்சை, கிரியை` என மூன்றாகிப் பின் பலவாகும். அதனையே, ``ஞானாதி பேதமாய்`` என்றார். இவ்வாறு அது பலவாவது, தன்னிச்சை யாலன்றிப் பிறரால் அன்று. அதனையே, ``உய்த்தகும் இச்சையில்`` என்றார். `உய்த்தல்தகும்` என்பது, ``உய்த்தகும்`` என நின்றது. `இங்ஙனமாகி ஐந்தொழிலை அது நடத்துதற்கு முடிவில்லை` என்றற்கு, ``நித்தம் நடத்தும்`` என்றும், `இதனால் அது தன்னியல்பினின்று வேறுபடுதல் இல்லை` என்றற்கு, `நடிக்கும்` என்றும், `இவ்வாறு நடித்தற்குக் காரணம் உயிர்கள் மாட்டு வைத்த பெரிய கருணையே யன்றிப் பிறிதில்லை` என்றற்கு ``மா நேயத்தே`` என்றும் கூறினார். `நேயத்தானே` என உருபு விரிக்க. சத்தி `ஆதி சத்தி` முதலிய பெயர்களைப் பெற்றுச் செயலாற்றும் பொழுது, சிவனும் அந்நிலைகளில் எல்லாம் அவற்றிற்கு ஏற்ப ``ஆதி சிவன்`` முதலாகப் பல பெயர்களைப் பெற்று நிற்பன். பரமசிவன், `சொரூப சிவன்` எனவும், ஏனைய ஆதி சிவன் முதலியோர் `தடத்த சிவர்` எனவும் அறிக. இவ்வனைத்துச் சிவமும், சத்தியும் பெயர், உருவம், தொழில் என்னும் இவற்றால் வேறு வேறாகச் சொல்லப் படுகின்றனவேயன்றிப் பொருளால் வேறுபாடு சிறிதும் இன்றி, ஒன்றேயாம்.
``சத்திதான் பலவோ என்னில்,
தான்ஒன்றே; அனேக மாக
வைத்திடும், காரியத்தால்``*
``சத்தன் வேண்டிற்று எல்லாமாம் சத்தி தானே``*
என்னும் சிவஞான சித்தியைக் காண்க.
இதனால், பரம்பொருளின் இயல்பு பற்றி மாயாவாதி முதலியோர் கூறும் கூற்றுக்களை மறுத்துச் சித்தாந்தம் உணர்த்தப்பட்டது.
``தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும்சத்தி
பின்னமிலான் எங்கள் பிரான்``l
எனத்திருவருட் பயனிலும் இவ்வியல்பு கூறப்பட்டது.