
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 21. பர லக்கணம்
பதிகங்கள்

செம்மைமுன் னிற்பச் சுவேதம் திரிதல்போல்
அம்மெய்ப் பரத்தோ(டு) அணுவன் உள்ளாயிடப்
பொய்ம்மைச் சகம்உண்ட போத வெறும் பாழில்
செம்மைச் சிவமேரு சேர்கொடி யாகுமே.
English Meaning:
Jiva`s PurificationIn contact with colour red
White, too, becomes red;
Like it it is,
When Jiva purified (white)
Reaches Siva (that is red);
In Jnana`s Void
That absorbs universes so unreal,
Siva stands high aloft
As a flag planted on Meru Mountain top.
Tamil Meaning:
மாணிக்க மணியின் செந்நிறம் முன் வந்து நின்ற போது, பளிங்கின் வெண்ணிறம் அந்தச் செந்நிறமாகவே திரிந்து காணப்படுதல் போல, வெளிப்பட்டு நின்ற அந்த நிலையான பரம் பொருள் முன்வந்து நின்றபொழுது ஆன்மாத் தன்வண்ணம் அப்பரம்பொருள் வண்ணமேயாக, அதனுள் அடங்கி நிற்கும் அப்பொழுது அதுகாறும் நிலையற்ற பிரபஞ்சத்தை நுகர்ந்து வந்த ஆன்ம ஞானம் பாச ஞானமாய் இருந்த நிலை அற்றொழியும். அவ்வொழிவில் சிவம் மேருமலையாய் நிற்க. ஆன்மா அந்த மேருமலையை அடுத்த காக்கையாய் இருக்கும்.Special Remark:
`சிவமேயாய் நிற்கும்` என்றபடி. ``கனக மலையருகே - போயின காக்கையும் அன்றே படைத்தது பொன் வண்ணமே``8 என்பதனால் இவ்வுவமப் பொருளை உணர்ந்து கொள்க. ``செம்மை, சுவேதம்`` என வாளா கூறினாராயினும், `மாணிக்கத்தினது செம்மை`` என்பதும், `பளிங்கினது வெண்மை` என்பதும் குறிப்பால் கொள்ளக் கிடந்தன. `மெய், பொய்` என்பன நிலை நிலையாமைகளைக் குறித்தன. `போதப் பாழ்` என இயையும். செம்மை - திரிபின்மை. சிவ மேரு, உருவகம். கொடி - காக்கை. ``ஆகும்`` என்றும் உருவகத்தையே தோற்றி நின்றது.இதனால், `பரம்பொருள் உயிர்களைத் தன்வண்ணம் ஆக்கும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage