
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்
பதிகங்கள்

காயப் பரத்தின் அலைந்து துரியத்துச்
சால விரிந்து குவிந்து சகலத்தில்
ஆயஅவ் ஆறா றடைந்து திரிந்தேற்குத்
தூய அருள்தந்த நந்திக்கென் சொல்வதே.
English Meaning:
Woken from the Primordial Turiya State,Wandering in the Bodily State—
Active in the Sakala State
With Tattvas six times six,
On them whose souls have thus roamed,
Nandi His Grace bestowed;
What shall I say of His greatness infinite!
Tamil Meaning:
உடம்பாகிய சுமையைச் சுமந்து கொண்டே உலகெங்கும் திரிந்து, அவ்வுடம்பால் துரிய நிலையில் உணர்வு ஒடுங்கியும், சகல நிலையில் உணர்வு மிகவிரிந்தும் கருவிகள் முப்பத்தாறின் சேர்க்கையால் இவ்வாறெல்லாம் அலமந்து கிடந்த அடியேனுக்கு அக்கருவிகளில் ஒன்றோடும் படாது தூய்தாய் உள்ள திருவருளை வழங்கி அமைதியைக் கொடுத்தருளிய நந்தி பெருமானது கருணைக்கு நான் நன்று சொல்வது எவ்வாறு!Special Remark:
பரம் - சுமை. `இன்` ஒடுவின் பொருளில் வந்த `ஆள்` உருபின் மயக்கம். இனி இதனைச் சாரியையாக்கி `ஒடு` உருபு விரிக்கினும் ஆம். `துரியத்துக் குவிந்து` எனக் கூட்டுக. `சாக்கிரம்` என்னின் கேவல சாக்கிரமும் ஆம் ஆதலின் அதனை விலக்கிச் சகல சாக்கிரத்தைக் குறித்தற்கு, ``சகலத்தில்`` என்றார் துரியத்தை அங்ஙனம் கூறாது வாளா ``துரியம்`` என்றமையால் அது கேவல துரியமே யாயிற்று. மக்களுடம்பையே பெற்றபோதிலும் உணர்வு இவ்வா றெல்லாம் கணந்தோறும் மாறி மாறஇ நிகழ்தலால் உயிர்க்கு உளதாகும் அலமரலைக் குறித்தவாறு. இவ்வலமரலையே நாயனார் முதல் தந்திரத்தில் ``உயிர் நிலையாமை`` - என அருளிச் செய்தார்.இதனால், அஞ்ஞானம் காரணமாக அலமரும் உயிர்கட்குக் குருவாகி வந்து ஞானத்தை அருளி அமைதியைத் தரும் சிவபெரு மானது பேரருட்கு அவ்வுயிர்கள் செய்யும் கைம்மாறு யாதும் இன்மை கூறப்பட்டது. இதன் இரண்டாம் அடியில் இன எதுகை வந்தது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage