
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 8. சம்பிரதாயம்
பதிகங்கள்

பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
ஒட்டடித் துள்ளமார் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்
வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.
English Meaning:
Siva makes Jiva Pure as HimselfIndulging in talk indiscriminate
Aimless I wandered;
—Me, He made pure,
All my impurities cleansed
Me and He, to balance brought
—A barter, all to perfection indeed!
Tamil Meaning:
`இவ்விடம், அவ்விடம்` என்பதில்லாமல் எங்கும் சென்று, எனது பிடிவாதக் கொள்கையையே வலிந்து கூறி வாயில் வந்தவற்றைப் பிதற்றிக்கொண்டு திரிந்து கொண்டிருந்த என்னைச் சிவகுரு எதிர்ப்பட்டு, எனது அகக்குற்றங்கள் எல்லாவற்றையும் ஒட்டடையை அடித்து நீக்குவது போல நீக்கி, அவைகளைத் தன் பக்கமாக எடுத்துக்கொண்டு, தன்னையும், என்னையும் ஒரு நிகராக வைத்துக் கொடுத்தும், கொண்டும் மாற்றிக்கொண்டான். என்னிடம் உள்ள குற்றங்களை முற்ற நீக்கினமையால், நாங்கள் இருவரும் ஒத்த வினையுடைய பொருளாயினோம். அதனால் கொடுத்துக் கொள்ளும் வாணிபம் தடையின்றி முடிந்தது.Special Remark:
பெள்+டு=பெட்டு. `விரும்பப் பட்டது என்பது பொருள். அது விரும்பப்பட்ட கொள்கையைக் குறித்தது வலியுறுத்திப் பேசுதலை `அடித்தல்` என்பர். `அடித்து` என்றது `அடித்தது போன்று` எனப் பொருள்தந்தது. `ஒட்டு` என்னும் முதனிலைத் தொழிற்பெயர், அதனையுடைய பொருளைக் குறித்தது. வாங்குதல் - தனது ஆற்றலால் தன்னைக் கடந்து செல்லாது தன்பக்கமே நிறுத்துதல். மல மாயா கன்மங்கள் நீக்கப்படுமேயன்றி, அழிக்கப்படா ஆதலால், `வாங்கி` என்றார். தட்டு - துலைத்தட்டு. ஒதத்ல், நிறையால் ஒத்து நேர் நிற்றல். `மாறினன்` என்றொழியாது ``ஒக்க மாறினன்`` என்றது, ஒவ்வாததனை ஒக்கப்பண் மாறினன்` என்பது தோற்றுதற் பொருட்டு. மாறுதல் - விற்றல். ``தன்னை மாறி யிறுக்க உள்ள கடனஅகள்``l என்றாற் போல்வன காண்க. விற்றமை கூறவே, வாங்கினமை தானே பெறப்பட்டது. தன்னை விற்றமை, தன் தன்மையை சீவனிடத்துப் பதிவித்தமை. என்னை வாங்கினமை, சீவபோதத்தைத் தன்னிடத்து ஒடுக்கினமை - ``வாணிபம் வாய்த்து`` என்றதனால், `அது பொருந்தா வாணிபம்` என்பதும், `வட்டமதொத்தது`` என்றதனால், `அஃது அங்ஙனமாயினும் அதன்கண் உள்ள பொருந்தாமை நீங்கினமையால் அது தக்கதாயிற்று` என்பதும் போந்தன.``தந்ததுன் றன்னைக் கொண்டதென் றன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர்`` 3
என்பதிலும், `சிவன் மேற்கொண்ட வாணிபம் பொருந்தா வாணிபம்` என்பது குறிக்கப்பட்டது. `வட்டம், வாசி` என்பன, தரக்குறைவை உணர்த்தும் ஒருபொருட் சொற்கள். `வட்டம தொத்தது`` என்றது `தரம் குறைவு நீங்கி நேரியதாயிற்று` என்றபடி. ``ஒத்தது`` என்பதன்பின், `ஆகலான்` என்பது எஞ்சி நின்றது.
இதனால், இறைவன் தானே குருவாய் நின்று உயிரைச் சீவத்தன்மை நீக்கித் தன்மையை எய்துவித்துத் தானாக்கிக் கொள்ளுதலாகிய ஞானச் செய்தி இனிது விளங்கக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage