
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்
பதிகங்கள்

இறையடி தாழ்ந்ததை வணக்கமும் எய்திக்
குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்
சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ
டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.
English Meaning:
How the Jnana Guru InstructsHe humbles before Divine Guru
In postures five ordained;
He bewails his faults,
Praises Master`s virtues;
Guru then shows the way of deliverance from mortal prison
And imparts Siva Jnana
He is truly the Guru that is of Sanmarga (Jnana Guru).
Tamil Meaning:
குருவருளை விரும்பும் மாணவனே, உன்முன் குருவாய் வந்து நிற்கும் சிவனை அங்ஙனமான சிவனாகவே கண்டு அவனது திருவடிகளில் வீழ்ந்து, ஏகாங்க திரியங்க பஞ்சாங்க சடங்க அட்டாங்கங்களாகிய ஐந்து வணக்கங்களையும் செய்து, பிறவித் துயரால் வருந்தும் உனது குறையை விண்ணப்பித்து, அச்சிவனது அருட்குணங்கள் பலவற்றையும் எடுத்துக் கூறிப் புகழ்ந்தபொழுது, நீயிருக்கும் சிறைக்கூடமாகிய உடம்பையே நீ என மயங்கியிருக்கும் உனது மயக்கத்தைப் போக்கி உனது உண்மையை உனக்குத் தெரிவித்து, நீ சிவத்தோடு ஒன்றாகும் நிலையை உன் அறிவு அறியும்படிச் செய்பவனே உண்மை ஞானாசிரியனாவான்.Special Remark:
``இறை``, குருவாய் வந்து நிற்கும் இறை என்பது அதிகாரத்தால் விளங்கிற்று. ஏகாங்க வணக்கமாவது கைகட்டித் தலையால் மட்டும் வணங்குவது. திரியங்க வணக்கமாவது, இரு கைகளையும் தலைமேற் குவித்துக் கும்பிட்டுத் தலை தாழ்த்து வணங்குதல். பஞ்சாங்க வணக்கமாவது மோவாய் இரு தோள் இரு முழந்தாள் இவ் ஐந்துறுப்பும் நிலத்தில் தோய வணங்குதல். சடங்க வணக்கமாவது, மோவாய் இரு கைகள், மார்பு, இரு கால்கள் இவ் ஆறுறுப்பும் நிலத்தில தோய வணங்குதல், அட்டாங்க வணக்கமாவது, மேற்கூறிய ஆறுறுப்புக்களுடன், இருகாதுகளும் நிலத்தில் தோய வணங்குதல். வணக்கம் நமஸ்காரம் எனப்படும். எட்டுறுப்போடு கூடிய வணக்கத்தை `சாட்டாங்க நமற்காரம்` என்பர். பல `வகையாலும் வணங்கி` என்றவாறு, ``நீ`` என்பதன்பின் `ஒன்றாக` என்பதும், ``அறிவுக்கு`` என்பதன்முன் `உனது` என்பதும், எஞ்சி நின்றன. அறிவித்தல் அறியும் தன்மையை உளதாக்கல்.இதனால், பக்குவி நல்லாசிரியனை அனுபவத்தில் தெளியுமாறு கூறப்பட்டது. பக்குவம் இன்மையால் நல்லாசிரியனைத் தலைப்படாது, ஆசிரியன் அல்லாதானைத் தலைப்பட்டவழி அதனை அனுபவத்தால் உணர்ந்து நீங்குமாறும் இதுவேயாதல் அறிக. ஆசிரியன் அல்லாதானை அடைந்து பயன் பெறாது எய்த்த மாணவன் அவனை வருத்தத்தோடு விட்டு நீங்கி நல்லாசிரியனை நாடிச் செல்லு தற்கு. தேன் இல்லாத மலரை அடைந்த தேனீ பின்னர் அதனைவிட்டுத் தேன் உள்ள மலரை நாடிச்செல்லுதலை உவமையாகக் கூறுவர்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage