
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 14. பக்குவன்
பதிகங்கள்

சாத்திக னாய்ப்பர தத்துவந் தானுன்னி
ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே
ஆர்த்த பிறவியின் அஞ்சி அறநெறி
சாத்தவல் லானவன் சற்சீட னாமே.
English Meaning:
Attributes of Good DiscipleA sattvic he is;
His thoughts centred on Finite Truth;
His vision clear through conflicting faiths;
Abhorrent of recurring cycle of births;
Straight in Dharma`s path he easy walks;
He, sure, is disciple good and true.
Tamil Meaning:
சத்துவ குணம் மிக்கவனாய், பரம்பொருளை அடைய எண்ணி, அப்பரம் பொருள் முதலிய நுண்பொருள்களின் உண்மையை அடியாகக்கொண்ட சமயங்களே `சமயங்கள்` என்னும் உணர்வு உள்ளத்தில் தோன்றப்பெற்று, தொன்று தொட்டு விடாது கட்டியுள்ள பிறவிக்கட்டிற்கு அஞ்சி அறநெறியைத் தளராது மேற்கொள்ள வல்லவனே சற்சீடன் - நன்மாணாக்கன் ஆவான்.Special Remark:
`சாத்துவிகன்` என்பது மருவி நின்றது. ஆத்திகம் - உண்மைப்பொருள்களை உண்டென்று உடம்படும் நெறி அவற்றை உண்டென உடம்படாது `இல்லை` எனப்பிணங்குவது `நாத்திகம்` எனப்படும். முன்னையது பொது வகையில் ஒன்றாயினும், சிறப்பு வகையில் பலவாதலை, ``பேதநெறி`` என்றார். தோற்றம் - உள்ளத்தில் தோன்றுதல் இதனையே,``தெய்வ என்பதோர் சித்தம் உண்டாகி``
என அருளிச்செய்தார் ஆளுடைய அடிகள். இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேலாகிய ``தோற்றமாகி`` என்னும் சினை வினை, ``அஞ்சி`` என்னும் முதல் வினையோடு முடிந்தது. இவ்வாறன்றி, ``ஆகி`` என்பதனை `ஆக` எனகத் திரித்துக்கொள்லுமாம். சாத்தல் - தரித்தல்; தாங்கல்; மேற்கொள்ளுதல். ஆத்திக புத்தி உடையவனே அறநெறியை உள்ளவாறு மேற்கொள்வானாகலானும், அவனே மாணாக்கன் ஆதற்கு உரியவன் ஆகலானும், ``ஆத்திக பேத நெறி தோற்ற மாகியே ... ... ... அறநெறி சாத்த வல்லானவன் சற்சீடனாமே`` என்றார். `நூல்கேட்கும் மாணாக்கர்க்கும் இந்நிலை வேண்டும்` எனக் கல்வியாசிரியர் வேண்டுதலை இங்கு நினைக.3 `ஆத்திகம் அடியாக வரும் அறஉள்ளமே பக்குவத்தை வருவிக்கும்` என்பது கருத்து.
இதனால், நன்மாணாக்கராம் பக்குவத்தை எய்துமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage