
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 1. சிவகுரு தரிசனம்
பதிகங்கள்

சித்திகள் எட்டொடும் திண்சிவ மாக்கிய
சுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்
சத்தியும் மந்திர சாதக போதமும்
பத்தியும் நாதன் அருளிற் பயிலுமே.
English Meaning:
Attainments Through Guru`s GraceThe miraculous powers of Siddhis eight,
The immaculate purity of Saktis eight,
The baptismal act supreme that turns Jiva into Siva,
The mystic powers of occult Yoga,
Of Mantra, of Bhakti, and of Jnana,
All these shall thou attain
If the Guru but his grace confers.
Tamil Meaning:
இறை அன்பும், அதன்வழி ஓதப்படும் பலவகை மந்திரங்களின் சித்திகளும், யோகத்தில் நிலைபெற்று நிற்கும் உறுதிப் பாடும், அந்த யோகத்தால் அடையப்படும் அட்டமா சித்திகளும், வாமை முதல் எட்டாய் விரிந்து நிற்கின்ற திரோதான சத்தி அங்ஙனம் நில்லாது, அருட் சத்தியாகி அருளுகின்ற சிவஞானமும், அந்த ஞானத் தின்வழி விளங்கிய சிவம் ஆன்மாவைத் தானாகச் செய்யும் முத்தியும் குருவருளால் இனிது கிடைப்பனவாம்.Special Remark:
``சித்திகள் எட்டு`` முதலியவற்றைச் செய்யுள் நோக்கி முறை பிறழ வைத்தார். திண்மை - நிலைபேறு. இதனால், சிவமாகி விட்ட உயிர் மீளப் பிறிதாகாமை குறிக்கப்பட்டது. சுத்தம் - சுத்தநிலை. `ஒடுக்கமுறையில் இறுதிக்கண் நிற்கும் மனோன்மணியே அருட் சத்தியாய் மாறியருளுவது` என்னும் கருத்தால், ஏனை எட்டையுமே திரோதாயிகளாகக் கூறினார். தூய்மை - பாசத்தின் பக்கத்தைவிடுத்துச் சிவத்தின் பக்கமாதல், அங்ஙனம் ஆகின்ற அதுவே சிவஞானம் ஆதலை அறிக. சாதக போதம் - சாதித்தவனது அறிவு நிலை. குருவை `நாதன்` என்றலை இந்நூற் பாயிரம் முதலியவற்றினும் காண்க.இதனால், சிவகுருவால் சிவஞானமேயன்றிப் பிறபயன் களும் கைகூடுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage