
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்
பதிகங்கள்

ஆமே பிரான்முகம் ஐந்தொடும் ஆருயிர்க்
காமே பிரானுக் கதோமுகம் ஆறுள
தாமேய் பிரானுக்கும் தன்சிர மாலைக்கும்
நாமேய் பிரானுக்கு நாரியல் பாமே.
English Meaning:
Siva is Inclusive of JivaSiva has faces five
And with His downward looking visage for Jiva,
He has faces six in all;
The Lord by Himself All
Sports the garland of heads
That verily is the Human Aspect
Of the godly One.
Tamil Meaning:
சிவபெருமானுக்குத் தனது நிலைக்கு உரியன வான ஐந்து முகங்களோடு, கீழ்நிலையில் உள்ள உயிர்களுக்கு உரிய அதோமுகமும் உண்டு. இவ்வாறாக உள்ள ஆறுமுகங் கட்கும், அவன் அணிந்திருக்கின்ற தலைமாலைக்கும் உயிர்கள் அச்சத்தைப் பொருந்துகின்ற அப்பெருமானுக்கு அருள் இயல்பாய் உள்ளது.Special Remark:
`பிரான் முகம ஐந்தொடு ஆருயிர்க்கு ஆம் அதோ முகம் பிரானுக்கு ஆம்` எனக் கூட்டி உரைக்க. `ஆறாய் உள்ள தாம்` என ஆக்கம் வருவிக்க. ``அச்சக் கிளவிக்கு ஐந்தும் இரண்டும்`` அன்றி நான் காவதும் வரும் பிற்கால வழக்குப்பற்றி, ``பிரானுக்கும் மாலைக்கும்`` என்றார். நாம் - அச்சம். நார் - அருள். முன் இரண்டடிகள் சிவனது முழுமுதல் தன்மையையும், பின் இரண்டடிகள் அவனது வடிவை அஞ்சத்தக்கதாக எண்ணி மருள்வாரைத் தேற்றுதலையும் குறித்தன. யாவரும் அறியும் ஐம்முகம் அவன் தனது உலகத்தில் நின்று தானே ஐந்தொழில் செய்வதற்கும், ஞானியரே உணரத்தக்க அதோமுகம் அனந்த தேவர் சீகண்டர் வழி. உருத்திர லோக தேவ மானுட லோகங்களில் ஐந்தொழில் நிகழ் வித்தற்கும் அமைந்தன என்பது, மேல் இரண்டாம் தந்திரத்து, அதோ முக தரிசன அதிகாரத்துட் கூறப்பட்டதனை இங்குச் சிறப்புணர்த்துதற் பயன் நோக்கிக் கூறினார். எனவே, ``ஆருயிர்`` என்றது `நிறைந்த உயிர்` என்னும் பொருட்டாய்ப் பிரளயாகலர் சகலரைக்குறித்த தாயிற்று. இம்மந்திரத்துள் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.இதனால், சிவநெறியே மெய்ப்பொருளை முதலாக உடையது` என்பதும், `அம் முதலது தன்மை யறியாது வெருளுதல் மயக்க உணர்வாம்` என்பதும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage