
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்
பதிகங்கள்

சைவப் பெருமைத் தனிநா யகன்றன்னை
உய்ய உயிர்க்கின்ற ஒண்சுடர் நந்தியை
எய்ய பெருமையர்க் கன்பனை இன்பஞ்செய்
வையத் தலைவனை வந்தடைந் துய்மினே.
English Meaning:
Come, Stand Apart and Seek the LordHe is the incomparable Lord
Of the magnificent path of Saivam;
He is Nandi of Divine Lustre,
That breathes the eternal life of Grace;
Beloved is He of the truly great;
The Lord of all universe, the source of all joy;
Come, stand apart, seek, realize,
And be redeemed.
Tamil Meaning:
அகச் சமயங்கள் அறிந்தோ, அறியாமலோ கருத்து வகையால் சைவத்தோடு ஒன்றி நிற்றலை அவருள் அறியாதாரை நோக்கி அதனையே இதுமுதலாக அறிவுறுத்துகின்றார். இதனை, சைவ சமயச் சிறப்பு என்பதொரு தனி அதிகாரமாகக் கொள்ளினும் பொருந்தும்,சைவ சமயத்தால் கொள்ளப்படும் ஒப்பற்ற தலைவனும், மக்கள் உயிர் நெடிது வாழ்ந்து உய்தி பெறுதற் பொருட்டு உயிர்ப்பாய் இயங்கு கின்றவனும், சிறந்த ஞான வடிவானவனும், தன்னை உணரும் பெருமை யுடையவரிடத்துத் தானும் அன்பு செய்கின்றவனும், அனைத்துயிர்க்கும் முடிவில் அவை விரும்பும் பேரின்பத்தைத் தருபவனும், இவ்வியல்புகளால் உண்மைத் தலைவன் தானே ஆகின்றவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் நீங்கி நிற்றலை விடுத்து, அணுக வந்து அடைந்து பிழையுங்கள்.
Special Remark:
`சைவ சமயமே தலையாய சமயம்` என்பது, மேல் பல விடத்தும், பலவகையானும் விளக்கப்பட்டமையின், அச்சமயத்தாற் கடவுளாகக் கொள்ளப்படுதலும் பெருமையாயிற்று. இறைவன் உயிர்ப்பாய் இயங்குதல் மேலேயும் (1512) கூறப்பட்டது. எய் - எய்தல்; அறிதல்; முதனிலைத் தொழிற்பெயர். ``எய்ய`` என்பது இதனடியாகப் பிறந்த பெயரெச்சக்குறிப்பு. ``வையம்`` என்றது உயிர்களை, ``வந்தடைந்து உய்மின்கள்`` என்றது, அவர்மாட்டு எழுந்த கருணைபற்றி.இதனால், சைவக் கடவுளாகிய சிவபிரானது பெருமையை வகுத்துணர்த்தி, அவனைச் சார, அழைத்தல் செய்யப்பட்டது, அகச்சமயிகளாதலின் அவர்தாம் உணர்த்தியவாறே உணர்ந்து ஒழுகுவார்கள் ஆதலின், இனி வருவனவும் இவைபற்றி என்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage