
ஓம் நமசிவாய
ஐந்தாம் தந்திரம் - 19. உட்சமயம்
பதிகங்கள்

இத்தவம் அத்தவம் என்றிரு பேர்இடும்
பித்தரைக் காணின் நகும்எங்கள் பேர்நந்தி
எத்தவ மாகில்என்! எங்குப் பிறக்கில் என்!
ஒத்துணர் வார்க்கொல்லை ஊர்புக லாமே.
English Meaning:
Attune to InfinityThis the right Faith, that the true Faith
When my Lord Nandi thus sees
Mad men in two contend
He smiles in pity;
What though the form of Faith?
What though the place of Birth?
They with mind to infinity attuned
Sure enter the City of God.
Tamil Meaning:
`இத்தவம், அத்தவம்` என்று தவங்கள் பல இருப்பனபோலச் சுட்டிப் பேசும் பித்தர்களைக் காணும்போதெல்லாம் எங்கள் பெரும்பெருமானாகிய சிவன் நகைப்பான். ஏனெனில், எந்தச் செயலாய் இருந்தால் என்ன? எந்தச் சமயத்தில் பிறந்தால் என்ன? தவத்தையும், அதனால் அடையப்படும் இறைவனையும் சிவநெறி யாளரோடு ஒத்த உணர்வினராய் உணர்பவர்கட்கு விரைவில் வீடு பெறுதல் கூடுவதாகும்.Special Remark:
``எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும்மன்னியசீர்ச் சங்கரன்தாள் மறவாமை பொருள்`` 1
என்னும் முடிபுரையையும், அதற்கு இலக்கியமான சாக்கிய நாயனாரது வரலாற்றையும் உணர்க. `பெருநந்தி` என்பது செய்யுள் முடிபெய்தி நின்றது.
தவம், தவச் செயல். ``எங்கு`` எனச் சமயத்தை இடமாக வைத்து ஓதினார். இனி ``எந்நாட்டில்`` எனப் பொருள்கொண்டு, `நாடு களது வேறுபாட்டால் இங்குப் பெறப்படுவது சமயவேறுபாடு` என்றலு மாம். ஒத்தற்கும், உணர்தற்கும் செயப்படுபொருள்கள் வருவிக்கப் பட்டன. வீடு பெறுதலை, ``ஊர் புகல்`` என்றது ஒப்புமை வழக்கு.
இதனால், பிறப்பின் சார்பால் அதன் சமயத் தொடக்கி னின்றும் நீங்கமாட்டாதோரும் சிவநெறிப் பற்றுடையராயின் உய்தி பெறுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage