
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
பதிகங்கள்

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர்க் கூடிய கூட்டத்தும்
ஐந்தார் பிறவி அறுத்துநின் றானே.
English Meaning:
Of red lotus hue is our Lord!Of Crimson fire hue is our Lord!
He sundered the chain of births,
That the dark cloud-hued Mal in pasa bound,
And to flower-bedecked Maya-Crowned, consigned.
Tamil Meaning:
எங்கள் இறைவனாகிய சிவபெருமானே செந்தாமரை மலரில் உள்ள அழகிய பிரம தேவனும், மேகம்போலும் நிறத்தையுடைய திருமாலும், நெருப்புப் போலும் நிறத்தை யுடைய உருத்திரனுமாவான். ஆதலின், அவனே மாயை என்னும் முதற் காரணத்தினாலும், மகளிரை ஆடவர் கூடும் கூட்டமாகிய துணைக் காரணத்தினாலும் ஐந்து கூறாய்ப் பொருந்தும் உடம்புகளைத் தோற்று வித்து நிற்கின்றான்.Special Remark:
முதலில் உள்ள வண்ணம் - அழகு; பொன்னிறம். இறுதியிற் கூறத்தக்க தீவண்ணனைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார். ``எம் இறை`` என்றதனை முதலில் வைத்துப் பிரிநிலை ஏகாரம் விரிக்க. ``செந்தாமரை வண்ணன்`` முதலிய மூன்றும் `எம் இறையே` என்னும் எழுவாய்க்குப் பயனிலைகளாய் நின்றன. ``முகில் வண்ணன்`` என்பதன் பின், `அவனே` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. `ஆடவர்` என்பது சொல்லெச்சம்.உடம்பின் ஐந்து கூறுகளாவன, ஐங்கோசங்கள். அவை, `அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்` என்பன. இவற்றின், விளக்கம் பின்னர்க் காணப்படும். இவற்றுள் அன்னமய கோசம் பிரம தேவனது ஆளுகைக்கும், பிராணமய கோசம் மாயோனது ஆளு கைக்கும், மனோமய கோசம் சீகண்ட உருத்திரரது ஆளுகைக்கும் ஏனை இரு கோசங்களும் அனந்த தேவரது ஆளுகைக்கும் உட்பட்டு இயங்குவனவாம். இவற்றுள், முதல் மூன்றும் பிரகிருதி மாயையின் காரியங்களும், ஏனை இரண்டும் அசுத்த மாயையின் காரியங்களு மாகும்.
இதனால், படைப்பு வேறுபாடு ஒருவாறு தொகுத்துக் கூறப்பட்டது.
இவ்வாறாகவே, `படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் சிவபெருமான் சுத்தமாயையில் தான் நேரே செய்வன்` என்பதும், `அசுத்த மாயையில் அனந்த தேவரை வாயிலாகக் கொண்டு (அதிட்டித்து நின்று) செய்வன்` என்பதும், `பிரகிருதி மாயையில் அனந்ததேவர் வழியாகச் சீகண்ட உருத்திரனை வாயிலாகக் கொண்டு செய்வன்` என்பது போதரல் காண்க.
இதனால், சிவபெருமான் மும்மாயையிலும் படைத்தல் முதலியவற்றைச் செய்யுமாறு கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage