
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
பதிகங்கள்

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.
English Meaning:
Out of Maya evolved spaceFrom space, air
From air, water,
From water, earth`s hard crust;
Thus they formed in succession
The elements five;
From Maya appeared the five subtle essences (Tanmatras)
And from them the five gross elements (Bhutas)
From the Vyahruti Bhu has arisen the present world.
Tamil Meaning:
`மகத்து` எனப்படும் தத்துவத்தினின்றே ஐம் பூதங்கள் தோன்றுவனவாம். அவை தோன்றுமிடத்து, அவற்றின் சாரம் எனத் தக்கனவாய், `சூக்கும பூதம்` எனப் பெயர்பெற்று நிற்கும் தன்மாத்திரைகளினின்றே தோன்றும். அவை தோன்றுதல், `வானம், காற்று, தீ, நீர் நிலம்` என்னும் முறையிலாம். தன்மாத்திரை ஒவ்வொன்றிலும் இருந்தே மேற்கூறிய வானம் முதலிய ஒவ்வொரு பூதமும் தோன்றும். பூதங்கட்கு அவ்வவற்றிற்குரிய தன் மாத்திரை களே காரணமல்லது, ஒரு பூதத்திற்கு மற்றொரு பூதம் காரணம் அல்ல. அதனால் ஒரு பூதத்திலிருந்து மற்றொரு பூதம் தோன்றுவதில்லை. ஒரு தன்மாத்திரையிலிருந்து ஒரு பூதம் தோன்றியபின், மற்றொரு தன்மாத்திரையிலிருந்து மற்றொரு பூதந்தோன்றும். இவ்வாறே ஐந்து தன் மாத்திரைகளினின்றும் ஐந்து மாபூதங்களும் மேற்கூறிய அம்முறையிலே தோன்றுவனவாம். அவற்றுள் இறுதியில் உள்ள நிலம் என்னும் பூதத்துட்பட்டனவே நாம் காணும் இவ்வுலகம்.Special Remark:
எனவே, `வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றும்` எனக் கூறுதல் தூலாருந்ததி நியாயமாகப் பொதுப் படக்கூறுதலே; உண்மையாற் கூறுமிடங்களில் தன்மாத்திரையினின்று பூதங்கள் தோன்றும் என்றே கூறப்படும் என்பதாயிற்று.`மகத்து` என்னும் வடசொல், தமிழில், ``மான்`` எனப்படும். நம்மனோர் உலகிற்கு இதுவே முதற்காரணமாதலால் இது, `மகத்து` எனப்படுகின்றது. `பிரகிருதி` எனவும், `மூலப் பிரகிருதி` எனவும் கூறப்படுவது இதுவே. சிவாகமங்கள் இதனை, `பிருகிருதி மாயை` எனவும் கூறும். பிற சமயங்கள், `இது பிறவற்றிற்குக் காரணமாவ தல்லது காரியம் ஆகாது` எனவும், `அதனால் இதுவே உலகிற்குப் பரம முதற்காரணம்` எனவும் கூறும். ஆயினும் சிவாகமங்கள், `இது அசுத் தமாயை யினின்றும் தோன்றுகின்ற, கலை என்னும் தத்துவத்தினின்றும் தோன்றும் காரியமே` எனக் கூறும்.
`சுத்த உலகம், மிச்சிர (கலப்பு) உலகம், அசுத்த உலகம்` என உலகம் மூவகைத்து என்பதும், `அதனால், அதற்கு முதற்காரணமும் மூன்றாதல் வேண்டும்` என்பதும், அம்மூன்றாவன, ``சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை`` என்பன என்பதும், ``அவற்றுள் சுத்த மாயையும், அசுத்த மாயையுமே எஞ்ஞான்றும் காரணமாயே நிற்பன; பிரகிருதி மாயை தன் காரியங்களை நோக்கக் காரணமாய் நிற்பினும், அசுத்தமாயையைின் காரியமேயாம்`` என்பதும் சிவாக மங்களின் துணிவு. சுத்த மாயை, `விந்து` எனப்படுதலால், அதன் காரியங்கள் யாவும், `வைந்தவம்` என்றும், அசுத்த மாயையே `மாயை` எனப்படுதலால் அதன் காரியங்கள் யாவும் `மாயேயம்` எனவும், பிருகிருதியின் காரியங்கள் யாவும் `பிராகிருதம்` எனவும் கூறப்படும். பிராகிருதத்தையும், மாயேயமாக அடக்கிக் கூறுதல் உண்டு.
``மானின்கண் பூதங்கள் ஐந்தும் தோன்றும்`` என்று தொகுத்துக்கூறி ஒழியாது, வகுத்துக் கூறினார், அவற்றின் தோற்ற முறை உணர்த்தற்கு. ``கனலின்கண்`` என்பது திரிந்து நின்றது. `கான் - காடு. அஃது ஆகுபெயராய்த் தீயை உணர்த்திற்று` எனவும் உரைப்பர். ``நீரும்`` என்றதற்கு, `நீர் வெளிப்பட்டபின்` என்பது பொருள். ``கலந்து`` என்றது `அவற்றொடு கூடி, `பூதங்கள் நான்கு` என்று ஆகிய பின்` என்றபடி. ``கடினம்`` என்றது ஆகுபெயரால், அக்குணத்தை யுடைய ``நிலம்``என்னும் பூதத்தை உணர்த்திற்று. ``கடினமாய்`` என்பதில், ``ஆய்`` என்பதனை ``ஆக`` எனத் திரிக்க. ஆதல், தோன்றுதல்.
தேன் வடித்தெடுத்த தேறல் ஆதலின், அதுபோலப் பூதங்களின் நுண்ணிலையாய அவற்றின் காரண நிலையை, ``தேன்`` என்றார். இக்காரண நிலையே தன்மாத்திரையாதல் அறிக. இவற்றைத் தேன் என்றதனானே, காரணத்தன்மை காரியத்தினும் உளதாகும் முறைமை பற்றிச் சத்தம் முதலிய தன் மாத்திரைகளது தன்மை அவற்றின் காரியங்களாகிய வானம் முதலிய பூதங்களினும் காணப்படும் என்பது குறிப்பாற் கூறப்பட்டதாம். `தேனின்கண் செறிந்து பூதமாய்` என்று ஒழியாது, ``ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்`` என இருமுறை தொகை கொடுத்து ஓதினார், `ஒரு தன்மாத்திரையிலே ஐந்து பூதமும் தோன்றுதலும் ஒரு தன்மாத்திரையிலே ஒரு பூதந்தோன்ற, அதன்பின், ஒரு பூதத்திலிருந்து மற்றொரு பூதம் தோன்றுதலும் இன்றி, வேறு வேறாய ஐந்து தன்மாத்திரைகளிலிருந்து, ஒரு தன்மாத்திரையில் ஒரு பூதமாக ஐந்து தன்மாத்திரையில் ஐந்து பூதமும் தோன்றும்` என்றற்கு ஐந்தும் தேனின்கண் செறிந்து ஐந்துமாம் என்றது, `ஐந்து பூதங்களும் முன்பு தனித்தனிக் காரணநிலையில் நின்று, பின் காரியமாகத் தோன்றும்` என்றவாறு. இவ்வாறு உரையாக்கால், இத்திருமந்திரத்துள் மூன்றாம் அடி வெற்றெனத் தொடுத்தலாய் முடியும் என்க. ``பூதமாய்`` என்பதில் ``ஆனபின்`` என்பது, ``ஆய்`` எனத் திரிந்து நின்றது. `இப்புவனம்` எனச் சுட்டு வருவித்துக்கொள்க. இப்புவனம், பிருதிவி தத்துவ புவனம். எனவே, ``இவ்வாறே ஏனைத் தத்துவங்களினும் புவனங்கள் உள`` என்பது குறித்துவாறு காண்க. இவ்வாற்றால் இங்குக் கூறிய தத்துவத்தோற்றம் பின் வருமாறாதல் காண்க.
மான் (பிரகிருதி)
தன்மாத்திரை
சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம்
(ஓசை) (ஊறு) (ஒளி) (சுவை) (நாற்றம்)
வானம் காற்று தீ நீர் நிலம்
(ஆகாயம்) (வாயு) (தேயு) (அப்பு) (பிருதிவி)
``சுவை ஒளி ஊறோசை நாற்றம்என் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு`` -குறள், 27
``நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலக மாதலின்``
(தொல். பொருள்) என்றற்றொடக்கத்தனவாக இவ்வுலகம் பற்றிப் பெரும்பான்மையாக யாண்டும் யாவரும் அறியக் கூறப்படுவன தன்மாத்திரைகளும், ஐம்பெரும் பூதங்களும் ஆகிய தத்துவங் களேயாதலின், `சிறப்புடைப் பொருளைத் தான்இனிது கிளத்தல்`` என்னும் முறையால் அவற்றின் தோற்றத்தையே சிறந்தெடுத்துக் கூறினார்.
எனவே, மானின்கண் தோன்றுவனவாக (பிரகிருதியின் காரியங்களாக) வேறும் சில தத்துவங்கள் உள என்க. அவை அந்தக் கரணங்களும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்களுமாம். ஆகவே, மானின் காரியங்கள் அனைத்தையும் பின் வருமாறு கண்டு கொள்க.
மான் (பிரகிருதி)
குணம்
புத்தி
அகங்காரம்
(தைசதம் வைகாரிகம் பூதாதி)
மனம் - செவி, தோல், வாக்கு, பாதம், பாணி,
கண், நாக்கு, மூக்கு. பாயு, உபத்தம்
(ஞானேந்திரியம்) கன்மேந்திரியம்
தன்மாத்திரை
சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம்
ஆகாயம் வாயு தேயு அப்பு பிருதிவி
குணதத்துவமே `சித்தம்` என்னும் அந்தக்கரணமாம். ஆகவே, ``சித்தம், புத்தி, அகங்காரம், மனம்`` என்னும் அந்தக்கரணம் - 4, ஞானேந்திரியம் - 5, கன்மேந்திரியம் - 5, தன்மாத்திரை - 5, பூதங்கள் - 5, ஆக 24 மானின் காரியங்கள் என உணர்க.
இதனால், பிரகிருதி மாயையில் உளவாகும் படைப்புக் கூறப் பட்டது. இடைநின்ற அசுத்த மாயைப் படைப்பினை நாயனார் இங்கு விதந்திலர். எனினும், அசுத்த மாயா காரியங்களை இங்கு ஒருங்கு இயையக் காட்டுதும்:-
அசுத்த மாயை
1. மாயை
2. காலம், 3. நியதி, 4. கலை,
5. வித்தை பிரகிருதி
6. அராகம்
7. புருடன்
காலம், `இறப்பு, நிகழ்வு, எதிர்வு` என மூன்றாகி, முறையே ஒரு கன்மத்திற்கு எல்லையையும், மற்றொரு கன்மத்திற்குப் பயனையும், வேறொரு கன்மத்திற்குப் புதுமையையும் உண்டாக்கும். நியதி, அவரவர் செய்த கன்மத்தை அவரவரே நுகருமாறு நியமிக்கும். கலை, வித்தை, அராகம் என்பன முறையே ஆன்மாவின் ``கிரியை, ஞானம், இச்ை\\\\u2970?`` என்னும் சத்திகளை விளங்கச்செய்யும். காலம் முதலிய ஐந்தும் வந்து பொருந்திய பொழுதுதான், ஆணவமல மறைப்பால் சடம்போலக் கிடந்த ஆன்மா கன்ம நெறியில் நின்று ஒன்றை அறியவும், விரும்பவும், செய்யவும் உரியதாய், `புருடன்` எனப் பெயர்பெற்று நிற்கும். அதனால், `புருடன்` என்பது ஒரு தனித் தத்துவம் அன்று. ஆன்மா காலம் முதலிய ஐந்தோடும் கூடி வினை நெறியில் செல்லும் நிலையே புருட தத்துவமாம். `மாயை` என்பது, காலம் முதலிய ஐந்தும் தோன்றுதற்கு ஏதுவாக அசுத்த மாயையில் பக்குவப்பட்ட ஒரு பகுதியேயாம். எனவே, இது மற்றவைபோலக் காரியமாகாது. காரணமேயாயினும், பக்குவப்பட்டமை பற்றி மற்றைய தத்துவங்களோடு ஒன்றாக வைத்து எண்ணப்படுகின்றது. எனவே, `காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை` என அசுத்த மாயையில் தோன்றும் தத்துவங்கள் ஏழாதல் அறியப்படும். சுத்த மாயையில் தோன்றும் தத்துவம் ஐந்து. அசுத்த மாயையில் தோன்றும் தத்துவம் ஏழு, பிரகிருதி மாயையில் தோன்றும் தத்துவம் இருபத்து நான்கு ஆகத் தத்துவம் முப்பத்தாறு ஆதல் காண்க. ஐந்து, ஏழு, இருபத்து நான்கு என நின்ற இவை முறையே ``சிவதத்துவம், வித்தியா தத்துவம், ஆன்ம தத்துவம்`` எனப் பெயர்பெறும். இவைகளில் இங்கு எடுத்தோதியவைபோக, ஏனையவற்றை நாயனார் பின்னர் ஆங்காங்கு இடம் வந்துழி வந்துழிக் குறித்தருளுவார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage