
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
பதிகங்கள்

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பஒன் றுண்டு
வயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும்
வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே.
English Meaning:
A rare Ruby—He is easy of reach,The One Lord—He is easy of love,
He is the light within Brahma;
And now I know why the Creator does it so easy.
Tamil Meaning:
பிரம தேவன் அறிவுடையவனாய் இருந்து, படைத் தல் தொழிலை வெற்றிபெறச் செய்கின்ற காரணத்தை நான் நன்கு அறிந்தேன். அஃது என்றும் நிலையாயுள்ள இன்பம் எளிதாகக் கிடைத்தற் பொருட்டுத் தன்னை விரும்பினால், அப்பயனை அவ் வாறே எளிதில் தருகின்ற பருத்த இரத்தினம் ஒன்று அவனிடம் உள்ளது என்பதே.Special Remark:
பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, அதன் பின், `நம்பப் பயன் எளிதாம் மணி ஒன்றுண்டு` என்பதைக் கூட்டி உரைக்க. பருமாமணி, சிவபெருமான். செம்மை - மாறுபாடின்மை. நயன் - இன்பம். ``ஆகிய`` என்பது ``செய்யிய`` என்னும் வினையெச்சம். நம்புதல் - விரும்புதல். ``நம்பன்`` என்பது பாடம் ஆகாமை வெளிப் படை. ``உண்டு`` என்னும் குற்றியலுகரத்தின்முன் உயிர் உடம்படு மெய் பெற்றது. அங்கே - அவ்வாறே; அறிந்தவாறே. வயன் - வெற்றி. வயணம் - காரணம். படைத்தலைச் செய்பவனையே முதல்வனாக உலகம் மயங்குதல் இயல்பு என்பது பற்றிச் சிவபெருமான் பிரமனுக்கு உள்ளொளியாய் நிற்றலையே விதந்தார்.இதனால், படைத்தல் முதலியவற்றைச் சிவபெருமான் பிறரால் செய்விக்கும் முறைமை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage