
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
பதிகங்கள்

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.
English Meaning:
He-and-She commenced playThe play of Two produced all;
With seasons changing, diverse the produce;
When He-and-She in holy union join
Complete be the act of creation.
Tamil Meaning:
ஒருவனும் ஒருத்தியுமான இருவர் (சிவனும், சத்தியும்) விளையாடலை மேற்கொண்டுள்ளார்கள். அவ் விளை யாடல் அவர்கட்குப் பொழுது போக்காகாது, எண்ணிலா உயிர்கட்கு எண்ணிலாப் பயனை விளைப்பது. அப்பயனும் உயிர்களின் பக்குவ நிலைதோறும் அதற்கேற்ப வேறு வேறாய் விளைவனவாம். உயிர்கள் வீடுபெறின், அவ்வொருவன் ஒருத்தியரது உலகத்தின் தொழிற்பாடு முற்றுப்பெறும்.Special Remark:
`சிவம், சத்திகட்கு உலகை மேற்கூறியவாறு பலபடச் செயற்படுத்தல் பெருஞ்செயலாய்த் துன்பம் விளைப்பதன்று; நினைத்த அளவிலே எளிதில் நிகழ்வனவாம்` என்றற்கு ``விளையாடல் உற்றார்`` என்றும், `விளையாட்டு` என்பதேபற்றி, `வீண்தொழில்` என்றாதல், `தம் நலம் கருதியது` என்றாதல் கருதலாகாது என்றற்கு, `எல்லாம் விளைக்கும்` என்றும், `எல்லாம்` எனப் பொதுப்படக் கூறினும், எல்லாப் பயனும், எல்லார்க்கும், எப்பொழுதும் ஆவனவல்ல என்றற்கு, ``பருவங்கள் தோறும் ஆன`` என்றும், `படைப்பின் குறிக்கோள் உயிர்களை வீடடைவித்தலே`` என்றற்கு, ``திரு ஒன்றின் செகம் செய்கை முற்றும்`` என்றும் கூறினார்.``காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி`` (தி.8 திருவெம்பாவை, 12) என்றாற் போல, இறைவன் உலகை நடாத்துதலை `விளையாட்டு` என்றல் வழக் காதலும், ``ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் - உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்`` (தி.8 திருவெம்பாவை, 11) என்றாற் போல, அவனது செயல் உயிர்களை உய்வித்தற் பொருட்டு நிகழ்வ தாதலும் அறிந்துகொள்க. ``போகமும் திருவும் புணர்ப்பானை`` (தி.7ப.59 பா.1) என்பதனால் `திருவாவது வீடுபேறு` என்பது இனிது பெறப்படும். திரு - நன்மை. வீடுபேறே முடிந்த நன்மையாதல் அறிக. உயிர்கள் வீடு பெற்ற பின்பும் அவ்வின்பத்தை நுகர்தல் முதல்வனது அருட் செயலின்றி அமையாது என்பதனை, ``இன்பம் கொடுத்தல் இறை`` (உண்மை விளக்கம் , 50) எனவும்,
மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கிஅருள் தானெடுத்து - நேயமுடன்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்
தானெந்தை யார்பரதந் தான். -உண்மை விளக்கம், 36
எனவும் கூறுமாற்றால் அறிந்து கொள்க. இக்கருத்துப்பற்றியே, ``முதல்வன் செயல் முற்றுப்பெறும்`` என்னாது, ``செகத்தின் செய்கை முற்றுப்பெறும்`` என்றார் என்க. இக்கருத்துணராதார், `உயிர்கள் வீடு பெற்ற பின்னை முதல்வற்குச் செயல் இல்லை போலும்` என மயங்குப.
இதனால், படைப்பு முதலியவைபற்றி அறியற்பாலன சில கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage