
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
பதிகங்கள்

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே.
English Meaning:
Paraparam that has neither Beginning nor End,In Pure Consciousness consorted with Paraparai
And in that Light Pure arose Param;
And from union of Param with Parai immaculate
Was Nada born.
Tamil Meaning:
இம் மந்திரத்தின் பொருளைக் கீழ்வரும் குறிப்புக்கள் பற்றி உரைத்துக் கொள்க.Special Remark:
முதற்பொருளாகிய கடவுட்பொருள், பொருளால் ஒன்றேயாயினும், `சிவம், சத்தி` எனத் தன்மையால் இரண்டாய் இருக்கும். அஃது யாதொரு செயலையும் மேற்கொள்ளாது இயல்பாய் இருக்கும் நிலையில் `ஒன்றைத் தொடங்குவது` என்பதும், `முடிப்பது` என்பதும் இல்லையாகையால், அந்நிலை ஆதி அந்தம் இல்லாததாம். அந்நிலையில் நிற்கும் கடவுட்பொருளை, `பராபர சிவம்` என்னும் பெயரால் குறிப்பர்.`பராத்பரம்` என்பது மருவி, `பராபரம்` என வழங்கும். பராத்பரம் - மேலானவற்றுக்கும் மேலானது; (தனக்குமேல் ஒன்று இல்லாதது) சிவம் பராபரமாய் நிற்கும்பொழுது அதன் சத்தி `பராபரை` எனப்படும். பராபரமாய் நிற்பதே சிவத்தின் சொரூபநிலை; அஃதாவது அதன் இயற்கைத் தன்மை. பராபரையாய் நிற்பதே சத்தியின் சொரூப நிலை; இயற்கைத் தன்மை. `பராபரை` என்னும் இயற்கை நிலையில் சத்தி, அறிவேயாய் (ஞானமேயாய்) நிற்கும். ஆகவே, `ஞானமே சத்தியின் சொரூபம்` என்பது விளங்கும். இதனையே சிவஞானசித்தி, (சூ. 1.62) ``சத்தியின் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்`` என்றது. இதுவே இங்கு, ``போதம தாகிப் புணரும்`` எனப்பட்டது. போதம் - அறிவு; ஞானம்.
இவ்வாறு இயற்கை நிலையில் உள்ள பராபர சிவம் `உயிர்களை உய்விக்க வேண்டும்` என்னும் விருப்பத்தால் உலகத்தை உண்டாக்க நினைக்கும். அந்நிலை உலகத் தோற்றத்திற்குத் தொடக்க நிலையாதலால், அந்நிலையில் நிற்கும் சிவம் `ஆதி சிவன்` என்றும், அதன் சத்தி `ஆதி சத்தி` என்றும் சொல்லப்படும். ஆதி சிவனே `பரசிவன்` என்னும் பெயர்க்கும், ஆதி சத்தியே `பராசத்தி` என்னும் பெயர்க்கும் உரியவராதல் இந்நூலில் பெறப்படுவது. சிவஞானசித்தி முதலிய சாத்திரங்கள் இங்குக் கூறிய பராபர சிவனையே, `பரசிவன்` என்றும், பராபரை என்னும் சத்தியையே `பராசத்தி` என்றும் கூறி, ஆதி சிவனையும், ஆதி சத்தியையும் அப் பெயராலேயே கூறும். இந்நிலையில் சிவம் சத்திகள் இவ்வாறு, `ஆதி சிவன், ஆதி சத்தி` எனப்படுதலால், பராபர சிவனும், பராபர சத்தியும் முறையே அநாதி சிவன், அநாதி சத்தியாதல் விளங்கும். இவ்வாறாகவே ``சோதியதனில் பரம் தோன்றத் தீதில் பரை தோன்றும்`` என்றார். ``சோதி`` என்றது பராபர சிவத்தை. வாளா, ``தோன்றும்`` என்றாராயினும், `பராபர சத்தியினின்றும் தோன்றும்` என்பது ஆற்றலால் இனிது விளங்கிற்று. எனவே, இத்தோற்ற முறை பின்வருமாறு அமைதல் அறியப்படும்.
பராபரசிவம் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி)
ß ß
பரசிவம் (ஆதிசிவன்) பராசத்தி (ஆதிசத்தி)
ஆதி சத்தியே, `திரோதான சத்தி, திரோதாயி` என்றெல்லாம் சொல்லப்படும். அளவிலா ஆற்றலுடைய கடவுட் பொருள் உலகத்தை ஆக்குதற்கு அதன் ஆற்றலுள் ஒருசிறுகூறே போதும் ஆதலின், `பராபர சிவத்தில் ஆயிரத்தில் ஒருகூறே பரசிவன்` (ஆதிசிவன்) என்றும் `பராபர சத்தியில் ஆயிரத்தில் ஒருகூறே பராசத்தி` (ஆதிசத்தி) என்றும் ஆகமங்கள் அளவிட்டுரைக்கும். `பரசிவம், பராசத்தி` (ஆதிசிவன், ஆதிசத்தி) என்னும் வேறுபாடுகள் முதல்வன் தன்னில்தான் கொண்டுள்ள வேறுபாடுகளேயன்றி மற்றொரு பொருளினால் கொள்ளும் வேறுபாடுகள் அல்ல.
பராபரசிவன் ஆதி சிவனாய் நின்று உலகைச் செயற் படுத்துமிடத்துத் தனது ஆற்றலாகிய ஆதி சத்தியாலே எல்லா வற்றையும் செய்தலின், அச்சத்தி செயற்படுமாற்றிற்கு ஏற்பவே தான் அதனோடு கூடியிருப்பான்.
இயற்கை நிலையில் ஞானமாத்திரமாய் இருக்கும் சத்தி, பின் உலகைத் தொழிற்படுத்த விரும்பும் நிலையில் அவ்விருப்பமாகிய இச்சையும், அத்தொழில் முறையை அறியும் ஞானமும், அறிந்தவாறே செய்யும் கிரியையும் என மூன்றாகி நிற்கும். ஆகவே `இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி` என ஆதி சத்தி ஒன்றே மூன்றாகும். இம்மூன்று சத்திகளுள் இச்சா சத்தி, ஏறுதல், குறைதல், ஒடுங்கல் என்பன இன்றி, எப்பொழுதும் ஒரு நிலையிலே நிற்கும். ஏனைய ஞானம் கிரியை இரண்டும் `ஏறுதல், குறைதல், ஒடுங்கல்` என்னும் வேறுபாடுகளை உடையனவாகும். அவ்விடத்து ஆதி சிவன் தனது ஆதிசத்தியின் வழி முதற்கண் எழுத்தோசையைத் தோற்றுவிக்க விரும்பி அதனைத் தோற்றுவிக்குமாற்றை ஞான சத்தியால் பொதுவாக அறிவான். அதனால், அவனே அந்நிலையில், `நாதம்` எனப் பெயர் பெறுவான். இறைவனை, `நாதன்` எனக் கூறுதல் இதுபற்றியே என்பர். இவ்வாறு `நாதம்` என்னும் நிலையில் நின்ற சிவன் எழுத்தோசையின் பொது நிலையாகிய நாதத்தைத் தோற்றுவித்தற்பொருட்டு அதன் தோற்றத்திற்கு நிலைக்களமாகிய நாத தத்துவத்தைச் சுத்தமாயை யினின்றும் தோற்றுவித்து, அதன்கண் நிற்பான். நாதனாகிய சிவன் ஆதி சத்தியின் வழித் தோன்றுதலின், ``அதன்பால் திகழ் நாதம் தோன்றும்`` என்றார். `தோன்றும்` என்பது சொல்லெச்சம். இதனால் இத்தோற்றம் பின்வருமாறு அமைதல் அறியலாம்.
பராபரசிவன் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி)
ß ß
ஆதிசிவன் ஆதிசத்தி சுத்த மாயை
ß ß
நாதம் நாத தத்துவம்.
`பராபரம் பராபரையைப் புணரும்` எனவும் `பராபரை பராபரத்தைப் புணரும்` எனவும் இருவகையாகவும் இயைத்துக் கொள்ளவைத்தார். அவை இருவேறு பொருள்கள் அல்ல என்பது விளங்குதற்கு.
இதனால், படைப்புத் தொடக்கம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage