
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
பதிகங்கள்

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் என்றும் நடுவுட லாய்நிற்கும்
பாரணல் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாய்உல காயமர்ந் தானே.
English Meaning:
He is the First Cause,All-pervasive in love;
He is Vishnu; He is Brahma,
He is Veda, The sound and matter.
Tamil Meaning:
சிவபெருமான் ஒருவனே தனது பேரருளால் எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் அறிந்தும், செய்தும் நிற்பவன். திருமால், ``தூல சரீரம், சூக்கும சரீரம், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம்`` என்னும் ஐவகை உடம்புள் முதல் உடம்பாகிய தூலசரீரம் முதல் நடுவுடம்பாகிய குண சரீரங்காறும் நிறைந்து நின்று செயலாற்றுவன். பிரமன், முதல் உடம்பாகிய தூல சரீரத்துள்ளும் பிருதிவி தத்துவத்தளவிலே நிறைந்து சென்று செயலாற்றுவன். பிரமனை, `வேத முதல்வன், உலகத் தந்தை` என்றெல்லாம் சொல்வது இந்த அளவில்தான்.Special Remark:
இங்கு, ``முதல் உடம்பு`` என்றது, ஒடுக்கமுறை பற்றி என்க. மேற்கூறிய தத்துவம் முப்பத்தாறனுள், ``ஞானேந்திரியம், கன்மேந்திரியம், மாபூதம் என்னும் பதினைந்தும் தூல சரீரமாம்`` எனவும், ``தன் மாத்திரை ஐந்தும், மனம் அகங்காரம் புத்தி என்னும் அந்தக்கரணங்களும் ஆகிய எட்டும் சூக்கும சரீரமாம் `` எனவும், ``சித்தம், குணம், பிரகிருதி என்று பலவகையாய் நிற்கும் ஒன்றே குண சரீரமாம்`` எனவும் `` வித்தியா தத்துவங்கள் ஏழனுள் மாயை தவிர ஏனைய ஆறுமே கஞ்சுக சரீரமாம்``, ``மாயை காரண சரீரமாம்`` அறிந்து கொள்க. இவற்றுள் நிலமுதல் பிரகிருதி அளவுமே திருமால் வியாபகன் ஆதலின், ``நாரணன் என்றும் நடுவுடலாய் நிற்கும்`` என்றும், நான்முகன் பிருதிவி அளவிலே வியாபகனாதலின், ``நான் முகன் பார் அண்ணல்`` என்றும் கூறினார். சிவபெருமானை விடுத்து இவ்விருவருள் ஒருவனை முதல்வன் எனச் சிலர் மயங்குதலன்றி, உருத்திரனைச் சிவபெருமானின் வேறாக எண்ணி மயங்குவார் இலராதல் பற்றி இவ்விருவரது வியாபக எல்லைகளை மட்டுமே உணர்த்தி அருளினார். சீகண்ட உருத்திரன் மாயாதத்துவங்காறும் வியாபகன் எனவும், மகேசுரன் ஈசுர தத்துவங்காறும் வியாபகன் எனவும், சதாசிவன் நாத தத்துவங்காறும் வியாபகன் எனவும் உணர்ந்துகொள்க.``அன்பு`` இரண்டில் முன்னது அருள்; பின்னது ஆசை. `அன்பிற் செய்யும்` என இயையும். பதம் - உலகம். செய்தல் - படைத்தல்.
இதனால், சிவபெருமானது முதன்மைக்கண் நிகழும் ஐயத்தினை முற்ற நீக்குதற் பொருட்டு, அதிகார மூர்த்திகளது அதிகார எல்லைகள் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage