
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
பதிகங்கள்

நின்றுயி ராக்கும் நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்றுய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.
English Meaning:
The Immaculate One creates all;And as He created me too,
He animates within me
A support to the body, a heir to karmic ills;
Verily, the Lord is the verily Just.
Tamil Meaning:
சிவன் முதல்வனாய் நின்று, உடலோடு கூடிய உயிர்களைப் படைக்கும்பொழுது, முதலில் அவைகட்கு வினைகளை வரையறுத்துக் கூட்டுவான். பின் அவற்றை அவை நுகர்தற்கு உடலுக்கும் துணையாய் நின்று அதனை இயக்குவான். ஏனெனில், அவன் அவரவர் செய்திக்குத் தக்க பயனை அவரவர்க்குத் தப்பாமல் ஊட்டுவித்து நிற்கும் நடுவுநிலைமையனாதலின்.Special Remark:
`உயிர்களைப் படைத்தல் என்பது, அவைகளை உடலொடு பொருந்தச் செய்தலாம்` என்பது விளக்குதற்கு. ``ஒன்றுயிர்`` என்றார். அளவை - கால வரையறை. ``துயர்`` என்றது அதற்கு ஏதுவான வினைகளை. `உயிர்ப்பிப்பான்` என்னாது `உயிர்ப் பான்` என்றார். அவையே தானாய் நிற்கும் ஒற்றுமை தோன்றற்கு. வினைகளைக் கூட்டுவிப்பவன் முதல்வனாயின், நல்வினை ஒன்றையே கூட்டுவியாது, தீ வினையையும் கூட்டுவித்தல் என்னை என்னும் வினாவை விடுத்தற்கு ``நடுவு நின்றான்`` என்றார். எனவே, படைப்பு ஒருபடித்தாகாது பலபடித்தாய்த் தோன்றுதற்கும், உலகில் நன்மையோடு தீமையும் உளதாதற்கும் காரணங்கூறியதாயிற்று.இதனால், சிவபெருமான் உலகத்தைத் தொழிற்படுத்தும்வழி நெறியின்றித் தொழிற்படுத்தாது, உயிர்களின் வினைக்கேற்பவே தொழிற்படுத்துவன் என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage