
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி
பதிகங்கள்

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியுங்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழும் பூவிலே.
English Meaning:
The Holy Nandi that is SadasivaAnd the Sakti that evolved Maan
Together in looks united in full;
And from that union arose the universe
As unto a blossom gently opening.
Tamil Meaning:
புண்ணியனாகிய சிவபெருமான் உலகெங்கும் நிறைந்து, எளிய உயிர்களை வளர்ப்பான். அவ்வாறே சத்தியும் சிவனது சங்கற்பரூபமாய் அவனோடு பூவில் மணம் போலப் பொருந்தி எங்கும் நின்று, அவன் கருதும் செயல்களை யெல்லாம் செய்வாள்.Special Remark:
``இயமானனை`` என்பது குறைந்து நின்றது. இயமானன் - ஆன்மா. ``கலவி`` என்றது, கலத்தலோடு கலந்து நின்று செய்யும் செயலையும் குறித்தது. ``உலகெங்கும் பொருந்தி`` என்றதனால் சிவபெருமான் ஐந்தொழில் செய்யுங்கால் உலகுயிர் களோடு அத்துவிதமாய் (கலப்பினால் ஒன்றாய்ப் பொருள் தன்மையால் வேறாய், உயிர்க்குயிராதல் தன்மையால் உடனாய்) நின்றுசெய்வன் என்பதும், ``இயமானனை வளர்த்திடும்`` என்றதனால், அவன் அவ்வாறு நின்று ஐந்தொழிலைச் செய்வது உயிர்கட்கு மலபாகம் வருவித்து அவைகளை வீடடையச் செய்தற் பொருட்டே என்பதும், ``சத்தியும் கலவி முழுதுமாய்`` எனவே, அவன்தான் செய்யும் தொழில்கள் பலவற்றையும் தனது சத்தியால் செய்வன் என்பதும், `பூவில் மணம்போல` என்றதனால், சத்தி அவனின் வேறாகாது, மரமும் காழ்ப்பும்போலக் குணகுணி பாவத்தால் இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் நிற்கும் என்பதும் பெறப்பட்டன.தண்மை, இங்கு எளிமை. ``தண்பதத்தால் தானே கெடும்`` (குறள், 548) என்பதிற்போல. ``சத்தியும் கலவி முழுதுமாய்`` எனவே, சிவமும் அத்தன்மையதாதல் பெறப்பட்டது. கண்ணுதல் - கருதுதல். கண் இயல்பாய் - கருதுதல் வடிவாய். எனவே, `சிவபெருமான் தான் செய்தனவற்றை நினைவு மாத்திரத்தால் செய்வதல்லது, சில கருவி களைக் கொண்டு செய்பவனல்லன்`` என்பது போந்தது. அக் கருதுதல் தானே அவனது சத்தி வடிவம் என்க. `மண்` என்னும் பூதத்தின் சிறப்புப் பண்பு நாற்றமாதல்பற்றி நாற்றத்தை, ``மண்ணியல்பு`` என்றார். `பூவில் மண் இயல்பாக மலர்ந்தெழும்` என மாற்றி உரைக்க. `மலர்ந்து எழுதல்` பல்வேறு வகைப்பட்ட நினைவுகளாய் விரிந்து, நினைந்தவாறே ஆக்குதல். இத்தகைய சத்தியானே அவன் எங்கும் நிறைந்தவன் ஆகின்றான் என்பதும் குறிப்பால் உணர்த்தியவாறு.
இதனால், ஐந்தொழில் செய்யுமிடத்துச் சிவபெருமான் உயிர்களோடு நிற்கும் முறைமையும், அம்முறைமைக்குத் துணை யாகின்ற அவனது சத்தியின் நிலைமையும், அச்சத்திக்கும், அவனுக் கும் இடையே உள்ள தொடர்பு வகையும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage