ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்

பதிகங்கள்

Photo

தேடுகின் றேன்திசை யெட்டோ டிரண்டிலும்
நாடுகின் றேன்நல மேயுடை யான்அடி
பாடுகின் றேன்பர மேதுணை யாம்எனக்
கூடுகின் றேன்குறை யாமனத் தாலே.

English Meaning:
Seek God

I seek in directions eight and two,
I seek, in goodness, the Feet of Lord,
I sing, ``Param is my Refuge``
I unite in Him, in mind`s fulness.
Tamil Meaning:
`நன்றேயுடையனாயும், தீதேயில்லாதவனாயும் உள்ள சிவனது அருளே எல்லாவற்றினும் மேலான துணையாம்` என்று துணிந்து அதனையே பெற விரும்புகின்றேன். விரும்பி அதனை எல்லாத் திசைகளிலும் சென்று தேடுகின்றேன். அதனைத் துதிக்கின்றேன். இவ் வகையில் யான் அதனை நினைவளவில் பெற்றுவிட்டேன்.
Special Remark:
`இனி அதனை அனுபவமாகப் பெறுவேன்` என்பதாம். ஆகவே, நீயும் நாடியும், தேடியும், பாடியும் நின்றால், அதனை அனுபவமாகப் பெறுவாய்` என்பது குறிப்பு. இறந்த காலத்தில் நிகழ்ந்த -வற்றை மாணவன் பொருட்டு நிகழ்காலத்தில் நிகழ்வதாகக் கூறினார்.
`நலமே உடையான் அடியே பரம் துணையாம் என நாடுகின்றேன்; திசை எட்டோ டிரண்டிலும் தேடுகின்றேன்; பாடுகின்றேன்; குறையா மனத்தாலே கூடுகின்றேன்` எனக் கூட்டி முடிக்க. சிவனது அருளை, `அவன் அடி` என்றல் மரபு.
இதனால், `அறிவு உதயமாகி, ஆன்மரூபத்தாலும், ஆன்ம தரிசனத்தாலும் தத்துவ தரிசனம் தத்துவ சுத்திகளைச் செய்தபின் சிவதரிசனத்தைப் பெற முயலல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.