
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்
பதிகங்கள்

அறிவுடை யார்நெஞ் சகலிட மாவ(து)
அறிவுடை யார்நெஞ் சருந்தவ மாவ(து)
அறிவுடை யார்நெஞ்சொ டாதிப் பிரானும்
அறிவுடை யார்நெஞ்சத் தாகிநின் றானே.
English Meaning:
Heart of JnaniThe heart of Jnani is Expanse Vast;
The heart of Jnani is Tapes rare;
The heart of Jnani is Lord`s abode;
There He stood, in the heart of Jnanis.
Tamil Meaning:
மெய்யறிவை அடைந்தோரது உள்ளங்கள் அனைத்துலகங்களையும் உட்கொள்ளவல்லன; செய்தற்கரிய சரியை கிரியா யோகங்களில் பழகிப் பழுத்தன. அதனால், முதற்கடவுளாகிய சிவபிரானும் அவரது உள்ளங்களையே தானாகச் செய்து, அவற்றின் கண் நீங்காமலும் நிற்கின்றான்.Special Remark:
``ஆவது`` இரண்டும் துவ்வீறுபெற்ற தொழிற் பெயர்கள். அவை ஆகுபெயராய், அவற்றையுடைய உள்ளங்களைக் குறித்தன. `நெஞ்சொடு` என்பதன்பின் `ஒன்றாகி` என்பது வருவிக்க. ``நெஞ்சு`` என்பது பொதுப்பட அந்தக் கரணங்களைக் குறித்தன. அதனானே இனம் பற்றிப் புறக் கரணங்களும் கொள்ளப்படும். ஈற்றில் `அறிவுடையார் நெஞ்சம்` என்றது, `அது` (அதன்கண்) என்றும் சுட்டுப் பெயரளவாய் நின்றது.இதனால், மெய்யறிவு பெற்றோரது கரணங்கள் நம்மனோரது கரணம்போலப் பசுகரணமாகாது, பதிகரணமாதல் கூறப்பட்டது.
``பாலை நெய்தல் பாடியதும், பாம்பொழியப் பாடியதும் காலனைஅன் றேவிக் கராங்கொண்ட - பாலன்
மரணந் தவிர்த்ததுவும் மற்றவர்க்கு நம்தம்
கரணம்போல் அல்லாமை காண்``
-திருக்களிற்றுப்படியார் - 2.
என்னும் சாத்திர மொழியை இங்கு ஒப்பு நோக்கி யுணர்க.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage