
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம - 14. அறிவுதயம்
பதிகங்கள்

அறிவு வடிவென் றறியாத என்னை
அறிவு வடிவென் றருள்செய்தான் நந்தி
அறிவு வடிவென் றருளால் அறிந்தேன்
அறிவு வடிவென் றறிந்திருந் தேனே.
English Meaning:
Siva`s Form is JnanaI knew not,
Siva`s Form is Jnana;
Nandi by His Grace taught me
Siva`s Form is Jnana,
I sought Jnana`s Form
And in that knowledge
I remained.
Tamil Meaning:
மேற்3 கூறியவாறு, ``வானோர் தலைவி`` தந்த மயக்கத்தால், `எனது வடிவம் அறிவு` என்னும் உண்மையை அறியாது. `உடம்பே` என்று மயங்கியிருந்த என்னை, நந்திபெருமான் தோன்றி அம்மயக்கத்தை நீக்கி, `உனது வடிவம் உடம்பன்று; அறிவு` என அருளிச்செய்து உண்மையை உணரப் பண்ணினார். அவரது திருவுளக் கருணையால் அடியேனுக்கு அறிவு உதயமாயிற்று. அதனால், `உடம்பு எனது வடிவம் அன்று` என உணர்ந்து அதனின் நீங்கியிருக்கின்றேன்.Special Remark:
`நந்தி பெருமான் எனக்குச் சொல்லியதைத் தான் நான் உனக்குச் சொல்கின்றேன்` என்பது குறிப்பெச்சம். முன்மந்திரத்தில், ``சிங்காதனத்தே சிவன் இருந்தான்`` என்றும்; ``பொங்கார் குழலியும் போற்றியென்றாள்`` என்றும் கூறிப் பின், ``அருள் செய்தான் நந்தி`` என்றும், பின் ``அருளால் அறிந்தேன்`` என்றும் கூறியதனால், மலபரிபாகத்தால் சத்தி நிபாதமும், சத்தி நிபாதத்தால் குருவருளும், குருவருளால் அறிவுதயமும் உளவாதலைக் குறிப்பான் உணர்த் தினமை காண்க. அறிவுதயம், `ஞானோதயம்` என்றும் சொல்லப்படும். அருள்காரணமாக அருளிச் செய்த அறிவுரை ``அருளால்`` என்று உபசரிக்கப்பட்டது.இதனால், அறிவுதயம் குருவருளாலே உளதாதல் கூறப்பட்டது.
[ஆயு மலரின் அணிமலர் தன்மேலே
மாய இதழ்கள் பதினாறும் அங்குள
தூய அறிவே சிவானந்த மாகியே
போய அறிவாய்ப் புணர்ந்திருந் தானே.]
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage