
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
பதிகங்கள்

அறிவொன் றிலாதன ஐயேழும் ஒன்றும்
அறிகின்ற என்னை அறியா திருந்தேன்
அறிகின்ற நீஎன் றருள்செய்தான் நந்தி:
அறிகின்ற நான்என் றறிந்துகொண் டேனே.
English Meaning:
Jiva Alone is the Sentient BeingTattvas Thirty and Six
Are insentient verily (devoid of knowledge)
I am the sentient one;
Yet I knew not Myself;
``You shall know yourself``
—Thus in Grace, Nandi declared;
That I am the Knower,
I have now known.
Tamil Meaning:
`நான் எது` என்று தொடங்கி, முப்பத்தாறு தத் துவங்களையும் நிலம் முதல் நாதம் ஈறாக, ஒவ்வொன்றாக ஆராய்ந்து வந்தபொழுது, அவை அனைத்துமே சடமாய் இருத்தலால், `யான்` என்றும், `எனது` என்றும் உணரும் உணர்வுகளையுடைய நான் அவை களில் ஒன்றேனும் அல்லாமை புலப்பட்டது. ஆயினும் `அவ்வுணர் வினையுடைய நான் எது` என உணர இயலாமலே திகைத்திருந்தேன். அப்பொழுது நந்தி பெருமான், `முப்பத்தாறு தத்துவங்களும் சடம்` என்றும், `நான் அவைகளில் ஒன்றேனும் அல்லேன்` என்றும் உணர்ந்தது எது? அதுதான் நீ என்று உணர்த்தினார். அதன் பின் நான் அவ்வாறே உணர்ந்து மெய்யுணர்வு உடையனாயினேன்.Special Remark:
ஆன்மாத் தன்னைப் பிற பொருள்களை உணர்தல் போலத் தன்னினும், பிறவற்றினும் வேறாகப் பிரித்து எதிர்ப்படுத்தி வைத்து உணர்தல் இயலாது` என்பதும், பிற பொருள்களின் இயல்பை உணரும் முகத்தானே, `அவ்வுணர்வையுடைய பொருளே நான்` என அனுமித்தே உணர்தல் வேண்டும் - என்பதும் கூறியவாறு. இஃது அறியாமையைப் பின்னர்த் தோன்றிய அறிவைக் கொண்டே அனுமித் துணர்தல் போல்வது. உலகில் ஒருவன் பிறரையும், பிற பொருளையும் எதிர்ப்படுத்திப் பார்த்தல் கூடும் ஆயினும், தன் முகத்தைக்தான் அவ்வாறு பார்க்க இயலாது, கண்ணாடி வழியாகவே பார்க்க இயலும். `அது போல்வது இது` என்றும் கூறலாம்.`என்முகம் எப்படியிருக்கிறது, எப்படியிருக்கிறது` என எண்ணி அலமருகின்ற ஒருவனும் அறிவுடையான் ஒருவன் கண்ணாடியைக் கொடுத்துக் காட்டிச் செய்வது போல, `நான் எது` எனத் தேடி அலைகின்ற பக்குவான்மாவிற்குச் சிவன் குருவாகிவந்து, `பிற பொருள்களை அறிந்து வருபவன் யாரோ, அவன்தான் நீ` என உணர்த்தி அருளுவான் - என்பதையே பின்னிரண்டடிகளால் கூறினார்.
`ஆன்மா - அருவுருவாய்த்
தோன்றிஉடன் நில்லாது; தோன்றாது நில்லாது;
தோன்றல்மலர்மணம்போல் தொக்கு`l
என மெய்கண்ட தேவரும் அருளிச்செய்தார்.
இதனால், `பொருளியல்புகளை உணர்ந்துவரும் ஆன்மா தன்னை உணருமாறு இது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage