
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
பதிகங்கள்

ஏலங்கொண் டாங்கே இடையொடு பிங்கலை
கோலங்கொண் டாங்கே குணத்தி னுடன்புக்கு
மூலங்கொண் டாங்கே முறுக்கிமுக் கோணிலும்
காலங்கொண் டானடி காணலு மாமே.
English Meaning:
Practise YogaCourse the breath in ways appropriate
Through Nadis, Idakala and Pingala,
Seat yourself in Asanas (postures) comely,
And agreeably direct the breath within;
Through Muladhara, that is triangle shaped Upward ascend;
Verily may you see the Feet
Of Lord, that is Timeless Eternity.
Tamil Meaning:
உயிர் (ஏலாத நிலைகளின் நீங்கி) ஏற்புடையதாகிய அழகிய நிலையைத் தலைப்பட்டபொழுது, இடைகலை, பிங்கலை நாடிகள் வழியாக இயங்குகின்ற காற்றோடு பொருந்தி அவற்றின் வடிவாகி, அப்பொழுதே இராசத சத்துவ தாமத குணங்களிலும் பொருந்திக் (கீழ்நோக்கிச் சென்று) மூலாதாரத்தை யடைந்து, அங்கே உள்ள குண்டலி சத்தியின் கீழ் நோக்கு நிலையை மாற்றி மேல்நோக்கி எழச் செய்து, பின்பு பிருதிவிமண்டலம், அப்புமண்டலம், தேயு மண் டலம் ஆகிய மூன்று மண்டலங்களிலும் மேற்கூறிய முக்குண வடிவாய் உள்ளமும் மூர்த்திகளிடமாக இறைவனைத் தரிசித்தல் கூடும்.Special Remark:
ஏற்புடை நிலையே அழகிது ஆதலின் அதனை `ஏல் அம்` என்றார். அம் - அழகு. அஃது ஆகுபெயராய், அழகிதாகிய நிலையைக் குறித்தது. அழகிய நிலையாவது யோகாவத்தை. அட்டாங்கத்தில் இயமம்முதலிய நான்கும் `யோக சாக்கிரம்` என ஒன்றாய் அடங்கும். ஏனைய பிரத்தியாகாரம் முதலிய நான்கும் யோக சொப்பனம், யோக சுழுத்தி, யோக துரியம், யோக துரியாதீதம் என்பனவாய் அமையும். இவை ஐந்துமே சிறப்பாக, `மேலாலவத்தை` எனப்படும்.யோகநூலார் இவற்றையே `மலம் நீங்கிய நின்மலாவத்தை` எனக் கூறுவராயினும்` ஒளியாலன்றி இருள் நீங்காதவாறு போல, ஞானத்தாலன்றி மலம் நீங்காது ஆதலின், ஞானவத்தைகளே நின்மலாவத்தையாம். இதனை,
``யோகில் தருவதோர் சமாதி தானும்
தாழ்ந்துபின் சன்னம் சாரும்``
எனச் சிவஞான சித்தி இனிது விளக்கிற்று.3 தாழ்தலாவது, கீழ் நிலையை அடைதல். இவை இங்ஙனமாயினும் நின்மலாவத்தையில் சேர்க்கும் ஆற்றலுடையன ஆகலின் `ஏற்புடையஅழகிய நிலை` எனப்பட்டன. கீழாலவத்தையும், இத்தன்மை இலவாதல்அறிக.
உயிர் சார்ந்ததன் வண்ணமாம் இயல்புடையது ஆதலின் `இடையொடு பிங்கலை கோலங் கொண்டு` என்றார். இடையும், பிங்கலையும் அவை வழியாக இயங்குகின்ற காற்றைக் குறித்தலால் ஆகுபெயர்கள். உடல் உள்ள அளவும் முக்குணங்கள் நீங்கா ஆதலின் ஆன்மா அவற்றினுட் புகவேண்டியதாயிறறு. முறுக்குதல் - திசை மாற்ற வைத்தல். `கோண்` என்றது, `மண்டலம்` என்றபடி. பிராசாத நிலையில் நிராதாரத்தை உட்கொண்டு முதலில் உள்ளது அக்கினி மண்டலமாகச் சொல்லப்படினும் ஆதார யோகத்தில் பிரமனை நோக்கி முதலில் உள்ளனப் பிருதிவி மண்டலமாகக் கூறினார். ஆதாரங்களின் காணப் படுபவர்கள் குணமூர்த்திகளேயாயினும் அவர்களை நிர்க்குண மூர்த்தி யாகிய சிவனது விபூதிகளாகவே உணர்தல் வேண்டும், என்றற்கு,
``காலம் கொண்டான் அடி காணலும் ஆமே``
என்றார். உம்மை சிறப்பு. அதனானே யோகாவத்தையில் சிறப்பு விளங்கும். காலம் கொண்டான் - காலத்திற்கு உட்படாமல் அதனைத் தன் செயலுக்குக் கருவியாகக் கொண்டவன் சிவன்.
``காலமும் கடவுள் ஏவலால் துணைக் காரணங்காண்``
என்றது சிவஞான சித்தி.l
`அவத்தை` எனப்படுவன மேற்கூறிய `கீழாலவத்தை, மத்தியா லவத்தை` - என்பனவேயன்றி, மேலாலவத்தையாகிய யோகா வத்தையும் உண்டு - என்பதை இதனாற் கூறினார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage