
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
பதிகங்கள்

சாக்கிர சாக்கிரந் தன்னில் திரோதாயி
சாக்கிர சொப்பனந் தன்னிடை மாயேயம்
சாக்கிரந் தன்னிற் சழுத்திதற் காமியம்
சாக்கிரந் தன்னில் துரியத்து மாயையே.
English Meaning:
Maya`s Manifestations in the Four States of ConsciousnessIn the Waking State—
Within the Waking State
Is Tirodhayi (obfuscation Sakti) active;
In the Dream State—
Within the Waking State
Is Mamaya (Impure);
In the State of Deep Sleep—
Within the Waking State
Is Kamya (of self delusion):
In the Fourth Turiya State
Within the Waking State
Is Maya (Pure).
Tamil Meaning:
மத்தியாலவத்தையாகிய சாக்கிர சாக்கிரத்தில் மட்டுமே திரோதானமலம் செயற்படும். (எனவே இந்நிலையில்தான் அனைத்துக் கருவிகளும் செயற்பட, ஆன்மா உலகினை நன்கு உணர்வதாகும்). சாக்கிர சொப்பனத் தளவிலேதான் - அஃதாவது, சாக்கிர சாக்கிரம், சொப்பனம் என்னும் இரண்டில் மட்டுமே ஆன்ம தத்துவம் செயற்படும். (அவற்றுள் சாக்கிரத்தில் மட்டுமே புறக் கருவிகள் செயற்படச் சொப்பனத்தில் அந்தக்கரண நிகழ்ச்சியாகிய சிந்தனை மட்டுமே உளதாகும்) சாக்கிர சுழுத்தியளவில்தான் - அஃதாவது சாக்கிர சாக்கிரம், சாக்கிர சொப்பனம், சாக்கிர சுழுத்தி என்னும் மூன்றளவிலேதான் கன்மங்கள் நிகழும். (எனவே, அந்த மூன்றளவிலேதான் ஆன்மாவிற்குச் சுக துக்கங்கள் விளங்கித் தோன்றும்). சாக்கிர துரியத்தளவில்தான் வித்தியா தத்துவங்கள் செயற்படும். (எனவே, அந்த நான்களவில்தான் ஆன்மாவிற்கு `யான்` என்னும் தன்னுணர்வு உளதாகும்).Special Remark:
எனவே, சாக்கிர துரியாதீதத்தில் யாதொரு செயற் பாடும் இன்றி, மூச்சும் நின்றுவிட ஆன்மாத்தான் சாக்கிர சாக்கிரத்தில் அறிந்த சுகம், அல்லது துக்கத்திலே தன்னையும் மறந்து, `அதுவேயாய் அழுந்தியிருக்கும்` என்பதுதானே விளங்கிற்று.ஆன்மாவிற்கு `யான்` என்னும் தன்னுணர்வு வித்தியா தத்துவத்தாலும், `இஃது இன்னது` என்றும் இஃது எனது, பிறருடையது என்றும் நிகழ்வதாகிய பிறபொருள் உணர்வு ஆன்ம தத்துவத்தாலும் நிகழும். `யான், எனது, பிறருடையது` - என்னும் உணர்வுகள் முழு அனுபவங்கள் ஆகா, அவை பொருள்களை உணரும் உணர்வுகளே யாம், அங்ஙனம் பொருள் உணர்வு நிகழ்ந்தபின், ஆன்மா அந்த உணர்வுகள் அனைத்தையும் இழந்து, உணர்ந்த பொருளில் அதுவாய் அழுந்துவதே முழு அனுபவமாகும். உலகப் பொருளிள் ஆன்மா அவ்வாறு அழுந்தி நிற்பதே உலகத்தைப் பற்றிய முழு அனுபவமாகும். அதுவே சாக்கிர துரியாதீதம். அதிற் சிறிது குறைந்தன எல்லாம் சாக்கிர துரியம் முதலிய நான்குமாம். இதுவே இம்மந்திரத்தால் கூறப்பட்டது.
வித்தியா தத்துவங்களைச் சிவ தத்துவங்கள் செயற்படுத்த, வித்தியா தத்துவங்கள் ஆன்ம தத்துவங்களைச் செயற்படுத்தும். ஆகவே, `வித்தியா தத்துவங்கள் ஆன்ம தத்துவங்களில் சில பல வற்றைச் செயற்படுத்தாது நிற்கும் நிலைகளே கீழாலவத்தை` எனவும், `சிவதத்துவங்கள் வித்தியா தத்துவங்களில் சில பலவற்றைச் செயற்படுத் தாது நிற்கும் நிலைகளே மத்தியா லவத்தை` எனவும் உணர்ந்து கொள்க.
சித்தாந்த சாத்திரங்களில் கூட, `மாயேயம்` என இருக்க வேண்டிய பாடங்கள் `மாமாயை` என்றே மாற்றப்பட்டிருத்தலைக் காணலாம். அவ்வாறே இம்மந்திரத்திலும் சில பிரதிகளில் பாடம் மாற்றப்பட்டுள்ளது.
`மாயேயம்` என்பது இங்கு பிரகிருதியின் காரியங்களையே குறித்தது. மூல கன்மமே `கன்மம்` எனப்பட, அதினின்றும் தோன்றும் நல்வினை தீவினைகளாகிய காரிய கன்மம், `கான்மியம்` எனப்பட்டுப் பின் `காமியம்` என மருவி வழங்குகின்றது. ஈற்றடியில் `மாயை` என்றது அசுத்த மாயையை. அஃது ஆகுபெயராய், அதன் காரிய மாகிய வித்தியா தத்துவங்களை உணர்த்திற்று.
நான்கடிகளிலும் `செயற்படும்` என்னும் பயனிலைகள் எஞ்சி நின்றன.
இதனால், மத்தியாலவத்தை ஐந்தன் இயல்புகளும் தொகுத்துக் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage