
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 4. மத்திய சாக்கிராவத்தை
பதிகங்கள்

நாடிகள் பத்தும் நலந்திகழ் வாயுவும்
ஓடிய காலின் ஒடுங்கி யிருந்திடும்
கூடிய காமம் குறிக்கும் இரதமும்
நாடிய நல்ல மனமும் உடலிலே.
English Meaning:
Yoga Brings RaptureThe ten Nadis
And the ten Vayus,
Will in ascending breath subside;
Rapturous your state shall be;
Agreeable your taste shall be;
Perfect your mind shall be;
In your good body.
Tamil Meaning:
நாடிகள் பத்தும், நன்மை விளங்குகின்ற வாயுக்கள் பத்தும் நாடிகளில் சிறப்புடைய, `இடை, பிங்கலை, என்னும் இரு நாடிகள் வழியாக இயங்குகின்ற `பிராணன்` என்னும் வாயுவிற்குக் கீழ்ப்பட்டு, அவற்றின்வழி நிற்கும். ஆணும், பெண்ணும் கூடியதனால் விளைகின்ற இன்பத்தில் உயிர் மூழ்குதற்குக் காரணமான சுக்கில சோணிதங்களும், அவ்வின்பத்தை விரும்புவதாய் அன்பைச் செய்கின்ற மனமும் உடல் முழுவதுமாய் இருக்கும்.Special Remark:
நாடிகள் பத்தும் தூல உடம்பிற்கு உறுப்பாய் அமைவன. அவை, `அத்தி, அலம்புடை, இடை, பிங்கலை, சுழு முனை, காந்தானி, குகுதை, சங்கிலி, சிகுவை, புருடன்` - என்பன.`பத்தும்` - என்பது, `வாயு` என்றதனோடும் சென்று இயைந்தது. வாயுக்கள் பத்தாவன, `பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன்` - என்பன. `நாடிகளாலும், வாயுக்களாலும் உடல் உருப்பெற்று நிலைபெறுகின்றன` எனவும், `உடலை மனம் பற்றி உலாவுதலால் இன்பம் விளைகின்றது` எனவும் கூறியதனால், தூலமும், சூக்குமமும், பரமும் ஆகிய உடம்பாய் உள்ள கருவிகளின் கூடுதல் குறைதல்களாலே அவத்தைகள் பலவாய் நிகழ்கின்றன` என்பது உணர்த்தியவாறு.
இதனால், அவத்தை பேதங்கட்குக் காரணம் குறிப்பால் உணர்த்தப்பட்டது. ஒடுங்கியிருந்திடும்` என்பதை இறுதியிலும் கொண்டு கூட்டுக.
(இரண்டாம் தந்திரத்து, `பாத்திரம்` - என்னும் தலைப்பில் வந்துள்ள `ஆவன ஆவ` என்னும் மந்திரம் (496) பதிப்புக்களில் இதனையடுத்தும காணப்படுகின்றது).
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage