
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
பதிகங்கள்

கைவிட லாவதொன் றில்லை கருத்தினுள்
எய்தி யவனை இசையினால் ஏத்துமின்
ஐவ ருடைய அவாவினில் தோன்றிய
பொய்வ ருடைய புலன்களும் ஐந்தே.
English Meaning:
Give Up Nothing; But Sublimate Your Thought Towards GodThere is nothing, you need give up;
The Five senses are organs false
That the five cravings to meet arose;
Reach to Him in your thoughts
And praise Him in songs sweet.
Tamil Meaning:
`ஐந்திந்திரியங்களை அடக்குதல் நம்மால் ஆகிற காரியம் அன்று` என இளைத்து, அதனைக் கைவிடுதற்குக் காரணம் சிறிதும் இல்லை. ஏனெனில், ஐந்திந்திரியங்களின் அவாவிற்குக் காரணமான நிலையற்ற பொருள்களில் பொருந்தியுள்ள புலன்களும் ஐந்திற்குமேல் இல்லை. அந்த ஐந்தையும் அடக்குதற்குச் செய்யத் தக்க உபாயமும் ஒன்றே ஒன்றுதான். அஃது ஒருபொழுதும் நம்மை விட்டு நீங்கிச் சேய்மையில் இல்லாது, எப்பொழுதும் நம் உள்ளத்திலேயே வீற்றிருக்கின்ற சிவனை நல்ல இசைப் பாடல்களால் துதிப்பதுதான். ஆகவே, அதனைச் செய்து இந்திரியங்களை அடக்கி, இன்பம் எய்துங்கள்.Special Remark:
கைவிடுதற்குச் செயப்படுபொருள் அதிகாரத்தால் வந்து இயைந்தது. ``ஒன்று`` என்றது `சிறிது` என்னும் பொருட்டாய் அவ்வளவிற்றான காரணத்தைக் குறித்தது. `துதித்தலுக்கு இயற்பாக்களிலும் இசைப் பாடல்களே சிறந்தன` என்றற்கு, ``இசையினால் ஏத்துமின்`` என்றார். ``அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகள்தாம் அருளுமாறே`` என அப்பரும் அருளிச் செய்தார். (தி.4 ப.77 பா.3) ஒருவர் ஒரு செயல் அன்றிப் பல செயல் செய்தல் உலகியலாய் இருக்க, `ஐவர் ஐந்து செயலே செய்பவராகின்றனர்` என அவரது மெலிவு உணர்தற்கு, ``ஐவருடைய அவாவினில் தோன்றிய புலன்களும் ஐந்தே`` எனவும், `அவரை வெல்லுதற்குரிய உபாயமும் ஒன்றே; அதுவும் எளிதானதே` என்றற்கு, ``கருத்தினுள் எய்தியவனை ஏத்துமின்`` எனவும் அருளிச் செய்தார்.கற்றுக் கொள்வன வாயுள; நாவுள;
இட்டுக் கொள்வன பூவுள நீர்உள;
கற்றைச் செஞ்சடை யானுளன் நாமுளோம்
எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே.
எனப் பிற இடங்களிலும் இங்ஙனம் எளிமையை உணர்த்துதல் காண்க. ஐந்திந்திரியங்களை, ``ஐவர்`` என்றதுபோலப் பொய்ப்பொருள்களை அஃதாவது நிலையாத பொருள்களை, ``பொய்வர்`` என்றார். ``ஐவர்`` என்பதிற்போல, ``பொய்வர்`` என்பதிலும் வகரமெய் பெயர் இடை நிலையாய் வந்தது. ``உடைய`` இரண்டும் குறிப்புப் பெயரெச்சங்கள். முன்னதனை, `ஆறாவதன் சொல்லுருபு` என்றலுமாம்.
இதனால், ஐந்திந்திரியங்களை அடக்கும் முறை அதனது எளிமை கூறி, `அதனால் அதனைத் தப்பாது செய்து பயன் பெறுங்கள்` என வலியுறுத்தி முடிக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage