ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை

பதிகங்கள்

Photo

நடக்கின்ற நந்தியை நாடொறு முன்னிப்
படர்க்கின்ற சிந்தையைப் பைய ஒடுக்கிக்
குறிக்கொண்ட சிந்தை குறிவழி நோக்கில்
வடக்கொடு தெற்கும் மனக்கோயி லாமே.

English Meaning:
Control Thought and Make it a Temple

Daily think of the Living Nandi
Gently control your thoughts distracting,
Course your thoughts through Muladhara,
Then your thoughts a temple become,
From north to south extending.
Tamil Meaning:
உயிர் செய்யும் செயல் யாவற்றிலும் தானும் உடனாய் நின்று செய்யும் சிவனை அறியாது அனைத்துச் செயல் களையும் தானே செய்வதாகக் கருதி மயங்குகின்ற உயிர் அம் மயக்கத்தினின்றும் நீங்கி அவனை இடைவிடாது உணர்ந்து நிற்பின், ஐம்புலன்களை நாடி ஓடுகின்ற மனம் மெல்ல மெல்ல அதனை விடுத்து அவனிடத்தே சென்று ஒடுங்கும். அங்ஙனம் ஒடுங்கிய நிலை ஒருவர்க்கு வாய்க்குமாயின், உலகில் உள்ள அனைத்துக் கோயில் களும் அவரது மனமாகிய அந்தக் கோயிலாகவே அமைந்துவிடும்.
Special Remark:
``படர்க்கின்ற`` என்பதில் உள்ள ககர ஒற்று எதுகை நோக்கி விரிக்கப்பட்டது. `சிந்தையைப் பைய ஒடுக்குமாறு எவ்வாறு` என்பதற்கு விடை மூன்றாம் அடியில் தரப்பட்டது. ஆகவே, `சிந்தை குறிவழி நோக்கி ஒடுங்குமாறு பைய ஒடுக்கி ஆம்` என வினை முடிபு செய்தல் கருத்தாயிற்று. `குறியல்லாததனைக் குறியாகக் கொண்ட சிந்தை உண்மையைக் குறியை நோக்கில்` என்பது மூன்றாம் அடியில் கூறப்பட்டபொருள். குறி- குறிக்கோள். உண்மைக் குறி, சிவன். `கோயில்` எனப்பின்னர் வருதலின், ``வடக்கு, தெற்கு`` என்பனவும் ஆகுபெயராய் அத்திசையில் உள்ள கோயில்களையே குறித்தன. ``வடக் கொடுதெற்கு`` என்றது, `நிலம் முழுதும்` என்றபடி. `அனைத்துக் கோயில்களும் மனக்கோயிலாகவே அமையும்` என்றது, `அவற்றில் எல்லாம் சென்று வழிபடுவார்க்கு அளிக்கும் பயன்களையெல்லாம் சிவன் இவர்க்கு இருந்த இடத்தில்தானே அளிப்பான்`` என்றதாம்.c