
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
பதிகங்கள்

முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.
English Meaning:
Mere Control Does Not AvailLoud they roar, the elephants in rut triple, (Pasas)
I applied the goad of knowledge to them to control;
But they romped about and in fury escaped,
They fat became, causing destruction in their train,
And sweet fields of sugarcane (virtues) devastating.
Tamil Meaning:
ஐந்திந்திரியங்களாகிய மத யானைகள் தறியில் கட்டுண்ணாது பிளிறிக்கொண்டு தாம் நினைத்தபடி செல்லும் இயல் புடையன. அதையறிந்து நான் அவைகளை அடக்கி நேரிய வழியில் செலுத்துதற் பொருட்டு ஞானமாகிய அங்குசத்தைப் பயன் படுத்தினேன். எனினும் அவைகள் அதையும் மீறித் தம் விருப்பப்படி ஓடித் தமக்கு விருப்பமான உணவை அளவு கடந்து உண்டு, அதனால் மேலும் மதம் மிகுந்து தீய குணத்தை மிக அடைந்து என்னை நிலைகுலையச் செய்யுமாறு பெரிது.Special Remark:
`அந்நிலை சொல்லுக் கடங்காது` என்பது குறிப் பெச்சம். `ஐந்திந்திரியமாகிய வேழம்` என்பது அதிகாரத்தால் வந்து இயைந்தது. இல்லையேல், `வேழம் எனப்பட்டன யாவை` என்பது விளங்காமை யறிக. ``உரன் என்னும் தோட்டியால் ஓர் ஐந்தும் காப்பான்`` (திருக்குறள், 24) என இவ்வாறு வருதலே மரபாகலின், அறிவென்னும் கோட்டையை வைத்தேன் என்பது பாடமாகாது. `அறிவென்னும் தோட்டியை வைத்தேன்` என்பதே பாடம் என்க. அறிவு, ஞானாசிரியரால் அருளப் பட்ட அறிவென்க. அந்த அறிவு முதிர்ந்து முறுகாமையால் கூர்மை செய்யப் பெறாத தோட்டிபோல் ஆய்விட, யானைகள் அதற்கு அடங்காது ஓடின என்க. இவ் யானைகட்கு உணவாவன அவற்றிற்குரிய புலன்கள். அவற்றை உண்ணுந்தோறும் அவாவே மேன்மேல் எழுதலால் ``கொழுத்தன`` என்றார். பின் வந்த ``வேழம்`` என்பது, `அவை` என்னும் சுட்டுப் பெயரளவாய் நின்றது. ``பெருங்கேடு மண்டி`` என்பதைப் பின்வந்த ``வேழம்`` என்பதன் பின்னர்க் கூட்டியுரைக்க. ``கேடு`` என்றது கேடு பயக்கும் குணத்தை. பாட்டின் இறுதியில், `பெரிது` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.இதனால், `அருளாசிரியர் அறிவுறுத்தவழியால் ஐந்திந் திரியங்களை அடக்க மாட்டாது புறக்கணிப்பாய் இருப்பின் அவற்றால் பெருங்கேடு விளையும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage