
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 33. ஐந்திந்திரியம் அடக்கும் முறைமை
பதிகங்கள்

சென்றன நாழிகை நாள்கள் சிலபல
நின்றது நீள்பொருள் நீர்மேல் எழுத்தொத்து
வென்று புலன்கள் விரைந்து விடுமின்கள்
குன்று விழஅதில் தாங்கலும் ஆமே.
English Meaning:
Control Senses and Bear Your Troubles GentlyThe hours sped,
The days many passed away;
Like the writing on the water
Transitory your possessions are;
Conquer the senses,
Quickly give them up;
Then even if as mountain,
Your troubles roll on you
Well may you bear them, gently indeed.
Tamil Meaning:
வாழ்நாளில் கழிவன சில நாழிகைகள் போலத் தோன்றுகின்றன. ஆயினும் அவை உண்மையில் சிலவும், பலவுமான நாட்களாய் விடுகின்றன. நெடுங்காலம் நிற்பதுபோலத் தோன்றுகின்ற உடம்பு நீர்மேல் எழுத்துப்போல விரைய மறைவதாகின்றது. இதனை உணர்ந்து, `அறிவுடையேம்` என உங்களை நீங்களே மதித்துக் கொள் கின்ற உலகீர், இளமையிற்றானே ஐம்புல ஆசையை வென்று, அப்புலன்களுக்குச் சார்பாய் உள்ள பொருள்களைத் துறந்து விடுங்கள். இல்லையேல், அவ்வாசையால் விளையும் வினைகள் மலைபோல வந்துவிழும்; அவைகளைத் தாங்க இயலாது.Special Remark:
``சென்றன`` என்பதைப் பின்னரும் கூட்டுக. பிற பொருள்களைப் பற்றுதற்குக் கருவி உடம்பாதலின் அதன் நிலை யாமையே முதற்கண் உணரத்தக்கது ஆகலின், ``பொருள்`` என்றது அதனையே குறித்தது.நீர்மேல் எழுத்து ஒத்து ``நின்றது`` என்றது, `என்றும் நிற்பதாக நினைக்கப்படுகின்ற உடம்பு. நிற்கும் நிலை நீர்மேல் எழுத்து நிற்பது போன்றதுதான் என்றபடி. எனவே, நிலையில்லாததனை, ``நின்றது`` என இகழ்ச்சியாகக் கூறியதாம். ``குன்று`` என்பது உவமையாகு பெயராய், அதுபோலும் வினைக்கூட்டத்தைக் குறித்தது. அதில் - அந்நேரத்தில். ஏகாரம், எதிர்மறை வினாவாய் வந்தது.இதனால், `அறிவுடையராயினார் ஐந்திந்திரியங்களை இளமைக் கண்ணே அடக்கி நலம்பெறல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage