
ஓம் நமசிவாய
ஏழாம் தந்திரம் - 14. அடியார் பெருமை
பதிகங்கள்

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே.
English Meaning:
Lord Can be seen only with Inner LightNeither male, nor female, nor hermaphrodite,
The light that is within ignorance concealed
Never, never can cognise Him;
Without eyes He sees,
Without ears He hears,
Only those in Knowledge ripe
Have for sure, seen Him.
Tamil Meaning:
இயல்பாகவே அறியாமையில் மூழ்கி அதுவாய் நிற்கின்ற உயிர்களுள் ஒவ்வொன்றின் அறிவினுள்ளும் நிற்கின்ற அறி வாயுள்ளவனும், ஒருவராலும் அறிய இயலாதவனும் கண்ணில்லாமலே காண்கின்றவனும், செவியில்லாமலே கேட்பவனும் ஆகிய சிவன் உலகில் காணப்படும் `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன். ஒருவராலும் அறியப்படாத அவனது அப் பெருந்தன்மையை அறிந்த அறிவே பேரறிவாகும்.Special Remark:
`அத்தகைய பேரறிவை உடையவர்கள் சிவனடியார்கள்` என்றபடி. ``பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன்`` என்பதை ``அண்ணல்`` என்பதன் பின்னர்க்கூட்டி, `அப்பெருமையை` எனச் சுட்டு வருவித்து உரைக்க. ``கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்`` என்றது, `விளக்கும் துணையுள்ள பொழுதன்றித் தானே விளங்கமாட்டாத உயிரினது அறிவு போலாது, தானே விளங்கி நிற்கும் அறிவை யுடையவன்` என்பதைக் குறித்தவாறு.ஒருவராலும் அறியொணாதவனை அடியராயினார் மட்டும் அறிந்தது எவ்வாறெனின், ``ஒருவர்`` என்றது, பதியாகிய அவனது ஞானத்தைப் பெறாது, பாசஞான பசுஞானங்களை மட்டுமே யுடையவருள் ஒருவரையே ஆதலானும், அவருள் ஒருவராய் நில்லாது பதி ஞானத்தைப் பெற்றவரே அடியவராகலானும் அவை தம்முள் முரணாகா என்க. மூடம் உடையதனை ``மூடம்`` என்றது பான்மை வழக்கு. ``அறியொணா`` என்னும் பெயரெச்ச மறையும், ``காணும்`` ``கேட்டிடும்`` என்னும் பெயரெச்சங்களும் அடுக்கி, ``அண்ணல்`` என்னும் ஒருபெயர் கொண்டன. மூப்பு - முதிர்ச்சி; உயர்வு.
இதனால், `உண்டு, பூசி, உடுக்குமாற்றால் அடியவர் உலகரோடு ஒத்தாராயினும், அவர் உலகரின் வேறாய உயர் நிலையினர்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage