
ஓம் நமசிவாய
ஆறாம் தந்திரம் - 2. திருவடிப்பேறு
பதிகங்கள்

தாடந்த போதே தலைதந்த எம்மிறை
வாடந்த ஞான வலியையும் தந்திட்டு
வீடந்த மின்றியே ஆள்கென விட்டருட்
பாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே.
English Meaning:
Grace of Feet is Kingdom WonEven as mine Master granted me the Grace of His Feet,
He had made me the head of all;
And investing me with the regalia-might of Jnana-sword,
He placed on my head the Crown of Grace Abounding,
And thus proclaimed:
``May you forever hold sway over this Land of Deliverance``
—All these He did, descending on earth, here below.
Tamil Meaning:
தனது சத்தியை உலகுக்கு உதவ வைத்தபொழுதே, அவ்வுதவியைப்பெறும் உயிரை அந்நிலையில் வைத்த எங்கள் சிவ பிரான், பின்பு இப்பூமியில் குருவாகி வந்து பலருக்கு அருள் புரிந்தது, அஞ்ஞானமாகிய மரத்தை வெட்டி வீழ்த்தும் வாள்போல்வதாகிய ஞானத்தின் உறுதிப்பாட்டைத் தந்து, `வீட்டுலகத்தை எல்லையில் காலம் ஆள்க` என அளித்தற் பொருட்டு, மும்மலக் கட்டினின்றும் வெளிப்படுத்தி அருள் தோற்றமாகிய தனது திருவடிகளை அவரது இனிய தலையிற் சூட்டியேயாம்.Special Remark:
சத்தியை, `தாள்` எனவும், உயிரை, `தலை` எனவும் உருவகித்துக் கூறுதல் மரபு. `சத்தி, திரோதான சத்தி` என்பதும், `உயிர்கள், சகல நிலையில் உள்ள உயிர்கள்` என்பதும், ``தந்த`` என்ப தனால் பெறப்பட்டன. ``வாள் தந்த`` என்பதில், ``தந்த`` என உவம உருபு. ``தந்திட்டு`` என்னும் செய்தென் எச்சம், எதிர்காலத்ததாய் நின்ற ``என`` என்னும் செயவெனச்சத்தோடு முடிந்து, எதிர்காலத்தில் இறந்த காலமாய் நின்றது, என்னை?``செய்தெ னெச்சத் திறந்த கால ம்
எய்திட னுடைத்தே வாராக் காலம்``1
என்பது கட்டளை யாகலின். விடுதல் - கட்டறுத்து இனிதியங்கச் செய்தல். பாடு - தோற்றம். அஃது அதற்கு இடமாகிய திருவடியைக் குறித்தது. ``தந்தது`` எனத் தொழிற்பெயர் எழுவாய் நின்றமையின், ``வைத்து`` என்னும் வினையெச்சம் பயனிலையாதல் பொருந்திற்று. `எம் இறை பார் வந்து தந்தது, விட்டு, வைத்து` என வினை முடிபு கொள்க. அவ்விடத்து, `தந்திட்டு ஆள்கெனற்கு` என்னும் தொடர் பயனிலையைச் சிறப்பித்து நின்றது.
இதனால், சிவகுருவினது திருவடியே பிறவிக்கு ஏதுவாகிய பாசத்தை அறுத்து, வீட்டிற்கு ஏதுவாகிய ஞானத்தைத் தருதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage