
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
பதிகங்கள்

வேதாந்த ஞானம் விளங்க விதியிலோர்
நாதாந்த போதம் நணுகிய பேர்க்கது
போதாந்த மாம்பரன் பாற்புகப் புக்கதால்
நாதாந்த முத்தியுஞ் சித்தியும் நண்ணுமே.
English Meaning:
When the Light of Vedanta dawns, from Karma are they freed;Then, up the path to the Light of Nadanta they scale;
When thus they reach the Lord of Bodhanta Light,
Salvation they attain—and Siddhis come to them.
Tamil Meaning:
நாதமுடிவான தத்துவங்களின் ஞானத்தைப் பெற்றவர்க்கே அஃது ஆன்ம போதத்தைக் கடந்த இறைவனை அடையும் நெறியாக அமைவது, ஆதலின் அதுவே வேதாந்த ஞானமாம். அதனால் அந்த ஞானத்தை உணரும் ஊழ் இல்லாமையால் பிரகிருதிகாறும் உள்ள தத்துவங்களையே உணர்வார்க்கு மேற்கூறிய இறைவனை அடையும் பரமுத்தியாதல், அதற்குக் கீழாய்ச் சுத்த தத்துவ புவனங்களை அடையும் பதமுத்தியாதல் கிடைக்குமோ! கிடையா.Special Remark:
முதலடியை மூன்றாம் அடியின் பின்னர்க் கூட்டி, தொகுக்கப்பட்ட உருவை `விதியிலோர்க்கு` என விரித்துக் கொள்க. புக்கது - கிடைத்த ஞானம். ``நண்ணுமே`` என்பதில் ஏகாரம் எதிர்மறைக்கண் வந்தது. பிரகிருதிக்குமேல் உள்ள வித்தியா தத்துவ சிவதத்துவங்களை உணர்தல் சிவாகமங்களை உணர்ந்தார்க்கன்றிக் கூடாமையால், சிவாகமங்களைக் கொள்ளாது, வேதத்தை மட்டுமே கொள்ளும் அந்தணர், அந்தணத் தன்மை நிரம்பப் பெற்றவர் ஆகார் என்றற்கு இவ்வாறு கூறினார்.வேதமும், சிவாகமும் முறையே நூலும், உரையும்போல நின்று பொருள்களைக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் உணர்த்தி நிற்றலின், நூலுள் தொக்கு நிற்கும் பொருள்களை விரித் துரைக்கும் உரையின்றி நூலது பொருளை முற்ற உணர்தல் கூடாமை போல, சிவாகமங்கள் இன்றி வேதத்தின் பொருளை விளங்க உணர்தல் கூடாது. அதனால், சிவாகமங்களை இகழ்ந்து வேதத்தமைட்டுமே ஓதுவோர் வேதத்தின் பொருளை முற்ற உணரமாட்டாது ஒருபுடையே உணர்வர். வேதத்தின் பொருளை முற்ற உணராத பொழுது, வேதத் திருநெறியின் முடிந்த பயனைப் பெறுதல் இயலாது என்க.
வேதம், சிவாகமம் இரண்டையும் ஒப்ப உணரும் அந்தணருள், வழிபாட்டுச் செயல்கள் பலவற்றையும் வேதமந்திரங்களால் செய்வோர், `வைதிக அந்தணர்` எனவும், ஆகமமந்திரங்களால் செய்வோர், `சைவ அந்தணர்` எனவும் சொல்லப்படுவர். `வைதிக அந்தணர்` எனினும், `மகாசைவர்` எனினும் ஒக்கும். `சைவ அந்தணர்` எனினும், `ஆதி சைவர்` எனினும் ஒக்கும். `சைவ அந்தணர், `சிவவேதியர், சிவ மறையோர்` என்றாற்போலச் சிறப்பித்துக் கூறிய வழியே `அந்தணர்` முதலிய சொற்கள் ஆதிசைவரைக் குறிக்கும். வாளா கூறியவழி அவை வைதிக அந்தணரையே குறிக்கும். எனவே, நாயனார் இங்குக் கூறுவனவெல்லாம் வைதிக அந்தணரையே குறிப்பனவாதல் அறிந்து கொள்ளப்படும். படவே, இவர் சிவாகமங்களையும் இகழாது வேதத்தோடு ஒப்ப மேற்கொள்ளுதல் வேண்டும் என நாயனார் கூறலின், `சிவாகமவழித் தீக்கை பெற்று - மகாசைவராய் விளங்கும் மறையவர்களே அந்தணர் எனப்படுதற்கு உரியர்` என்பது நாயனாரது திருவுள்ளமாயிற்று. ஆகவே, மகா சைவரல்லாத வைதிகப் பிராமணரைப் புரோகிதராகவும், பரிசாரகராகவும் கொள்ளுதல் சைவர்க்கும், பரார்த்த பூசை முதலியவற்றிற்கும் குற்றமாதல் விளங்கும்.
இதனானே, நாயனார் தமிழையும், வடமொழியையும் ஒரு நிகராகவே கூறினமையின், `வேத சிவாகமங்களோடு ஒத்து நிகழும் தமிழ் நூல்களையும் அந்தணராவார் இகழாது போற்றுதல் வேண்டும்` என்பதும், இங்ஙனம் வேதம், சிவாகமம், திருநெறித் தமிழ்நூல் என்ப வற்றை ஒப்ப ஓதி உணர்வோருள் வழிபாட்டுச் செயல்களைத் தமிழ் மந்திரத்தால் செய்வோர் `திருவந்தணர்` என்றும், `திருவாசிரியர்` என்றும் கொள்ளத்தகுவர் என்பதும் நாயனார்க்கு ஏற்புடையதாதல் விளங்கும்.
``நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த - மறைமொழி தானே மந்திரம் என்ப`` (தொல். செய்யுளியல்) என்ற தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தால், தமிழ் மொழியில் மந்திரம் உளதாதல் தெற்றெனப் புலப்படும்.
இத்தன்மை உடைய மகாசைவருள் தில்லைவாழந்தணர் தில்லைக் கூத்தப் பெருமானுக்குத் தொண்டு பூண்டு அவனைக் காலந் தோறும் தவறாது வழிபடும் நியமம் உடையராதல்பற்றித் திருத் தொண்டருள் அவரே முதன்மை வாய்ந்தவர் என்னும் திருக்குறிப்பால் திருவாரூர்த் தியாகேசப் பெருமான், `தம்மைத் திருத்தொண்டருக்கு அடியராக்கும் நாள் எந்நாளோ` என இறைஞ்சி நின்ற நம்பி யாரூரர்க்கு, `தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்` என அடியெடுத்துக் கொடுத்துத் திருத்தொண்டத் தொகையில் முதற்கண் தில்லைவாழந்தணரை இடம்பெறச் செய்தருளினான் என்க. இவ்வுண்மை திருத்தொண்டத் தொகை தோன்றுதற்கு முன்பே குறிப்பாற் புலப்படுமாறு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் தில்லை வாழந்தணரைச் சிவாகம நெறியாகிய, `தீக்கை` என்னும் சிறப்புப் (மெய்ந்நெறிச் செய்கை) பெற்றமை பற்றி, ``சிறப்பர்`` (தி.1 ப.80 பா.2) என்றும், இச்சிறப்பால் இவர் சிவோகம் பாவனையைத் தலைப்பட்டுச் சிவனுரு எய்தி நின்றமையை,
``நீலத்தார் கரியமிடற் றார், நல்ல
நெற்றி மேலுற்ற கண்ணினார், பற்று
சூலத்தார், சுடலைப்பொடி நீறணி வார்சடையார்``
-தி.3 ப.1 பா.3
என்றும் அருளிச்செய்தார். இச்சிறப்புப் பற்றி இவர் `தீக்கிதர்` எனப் பெயர் பெற்று நிற்றல் அறியற்பாற்று. இதனானே `தீக்கிதர்` என்னும் பெயருடைய பிற அந்தணரும் மகாசைவராதல் விளங்கும்.
தில்லைவாழந்தணர் சிவாகமங்களையும் வேதத்தோடு ஒப்ப மேற்கொண்டு ஒழுகுதலைச் சேக்கிழார்,
``வருமுறை எரிமூன்றோம்பி ... ..
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
அருமறை நான்கி னோடா றங்கமும் பயின்றுவல்லார்``
``அறுதொழில் ஆட்சியாலே அருங்கலி நீக்கியுள்ளார்``
``ஞானமே முதலா நான்கும் நவையறத் தெரிந்துமிக்கார்``
-தி.12 தில்லைவாழந்தணர் பு. 5,6,7
என விளக்கினார்.
`இவர்கள் கூத்தப் பெருமானை வேதமந்திரங்களாலே வழிபடுவர்` என்பதனையும் அவர்,
``மங்கலத் தொழில்கள் செய்து மறைகளால் துதித்து .... ....
.... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... .... ....
அங்கணர் கோயி லுள்ளா அகம்படித் தொண்டு செய்வார்``
எனக் குறித்தருளினார்.
தில்லைவாழந்தணரைச் சேக்கிழார், ``அகிலமெல்லாம்புகழ் திருமறையோர்`` எனச் சிறப்பித்தார். அதனானே அவரால் ``திரு மறையோர்`` எனக் குறிக்கப்பட்ட அப்பூதியடிகள் முதலாயினாரும் மகாசைவராதல் அறியப்படும். ஞானசம்பந்தரது தந்தைவழி, தாய்வழி இரண்டும் மகாசைவ மரபே என்பதனைச் சேக்கிழார்,
``மரபிரண்டும் சைவநெறி வழிவந்த கேண்மையராய்`` -தி.12
எனக் குறித்தருளினார். இவ்வாற்றானே, `குங்குலியக் கலயர், முருகர், சண்டேசர், சோமாசிமாறர், நமிநந்தியடிகள், நீலநக்கர்` என்னும் நாயன்மார்களும் மகாசைவரேயாதல் பெறப்பட்டது. சேக்கிழார் தில்லைவாழந்தணர் முதலியோரைக் குறித்தவாறே உமாபதிதேவரும் பெரியபுராணத்துட் போந்த வைதிக அந்தணர் அனைவரையும் ``திருமறையோர்`` (சேக்கிழார் நாயனார் புராணம் - 36) எனக் குறிப்பிடுதல் காண்க.
சண்டேசுர நாயனாரது பதியாகிய திருச்சேய்ஞலூரைச் சேக்கிழார், ``திருமறையோர் மூதூர்`` என்றமையால், அதன்கண் வாழ்ந்த அந்தணரும் மகாசைவரே என்பது பெறுதும். எச்சதத்தன் சிவாபராதம் செய்து ஒறுக்கப்பட்டோனாதல் பற்றி அவனது சைவச் சிறப்பையும், அவனொடு வாழ்ந்த பிற அந்தணரது சைவச் சிறப்பையும் சேக்கிழார் விரித்திலர் எனினும், ``வேதப் பயனாம் சைவமும்போல் மண்ணின் பயனாம் அப்பதி`` என்பதனால் அங்குத் திகழ்ந்த சைவச் சிறப்பைக் குறித்தருளினார். இத்தகு சைவச்சிறப்பு அங்கு இல்லையேல், அவர் கூறியவாறு அவ்வூர் தில்லை வாழந்தணர்கள் சோழமன்னர்கட்கு முடிசூட்டும் தலங்கள் ஐந்தனுள் ஒன்றாயிருத்தல் கூடுமோ!
சைவ அந்தணர்க்கு நூல், சிகை என்பவற்றோடு காதில் சுந்தர வேடம் சிறப்படையாளமாம்.
சிவாகமத்தை இகழ்ந்தொதுக்குமாற்றால் அந்தணருட் சிலர் வேதத்தின் பொருளை முன்னொடு பின் முரணாதவாறு ஒருபடித்தாக உணரமாட்டாது, `பூர்வ பாகமாகிய கன்மகாண்டமே வலியுடைத்து` என அதனையே சிறப்பாக மேற்கொண்டு, `ஞானகாண்டம் புனைந் துரை` எனப் பொதுவகையால் தழுவி, `தெய்வம் இல்லை` எனக்கூறி நாத்திகராய் ஒழிவாரும், (மீமாஞ்சகர்) `உத்தர பாகமாகிய ஞானகாண்டமே வலியுடைத்து` என அதனையே சிறப்பாக மேற்கொண்டு, `கன்ம காண்டம் மந்த பரிபாகிகட்கே உரியது; அதனால் அதனுள் வலியது இப்பகுதி, மெலியது இப்பகுதி என ஆராய்தல் பயனில் உழப்பாம்` என்று பொதுவகையால் தழுவிக் கிரியா மார்க்கத்தில் அனேகசுர வாதிகளாயும், ஞான மார்க்கத்தில் `சீவான்மாவே பரமான்மா` என்னும் அகம்பிரமக்காரர்களாயும் நிற்பாரும் (மாயாவாதிகள்) `கன்ம காண்டம், ஞானகாண்டம்` என்னும் இரண்டையும் ஒப்பக்கொள்ளினும், உலகத்தின் `தோற்றம், நிலை, இறுதி` என்னும் முத்தொழிலையும் செய்பவனே முதல்வன் என உணரமாட்டாது, `அவற்றுள் நிலையாகிய சாத்துவிகத் தொழிலைச் செய்பவனே முதல்வன்; ஏனை இராசதத் தொழிலாகிய தோற்றத்தைச் செய்பவனும், தாமதத் தொழிலாகிய இறுதியைச் செய்பவனும் முதல்வர் ஆகார்` என்று இகழ்ந்து, `அவருள்ளும் தாமதத்தொழிலைச் செய்பவன், தோற்றத்தைச் செய்பவனிலும், கீழ்ப்பட்டவன்` எனக்கூறிச் சிவநிந்தகராவாரும் (பாஞ்சராத்திரிகள்) ஆவர். இவரை எல்லாம் சைவாகமங்கள் புறச்சமயிகள் என்றே ஒதுக்கும். இவருள் சிவநிந்தை செய்தொழுகுவாரை `அகத்தியர், கௌதமர்` முதலிய முனிவர்களது சாப வயப்பட்ட துர்ப் பிராமணர்கள் என்று காந்தம், கூர்மம் முதலிய உயரிய புராணங்கள் இகழ்ந்தொதுக் குதலை அறிந்துகொள்க. இன்னோரன்ன, குழறு படிகள் பலவும் சிவாகமங்களைப் பொருட்படுத்தி உணராமையான் உளவாவன என அறிக.
இதனால், `வேத சிவாகமஞானமும் வைதிக சைவ ஒழுக்க மும் உடைய அந்தணரே அந்தணத் தன்மை நிரம்பியவர்` என்பது வலியுறுத்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage