ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்

பதிகங்கள்

Photo

அந்தண்மை பூண்ட அருமறை அந்தத்துச்
சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
நந்துதல் இல்லை நரபதி நன்றாகும்
அந்தியுஞ் சந்தியும் ஆகுதி பண்ணுமே. 

English Meaning:
The holy Brahmins who the pure life embrace,
And ponder well no truths that mark the Vedas` end,
Their land wanes not, their king`s earthly empire ever grows,
If morn and eve the sacrificial fire they tend.
Tamil Meaning:
உயிர்களிடத்து அழகிய அருளை மேற்கொண்ட வரும் வேதாந்த மெய்ப்பொருளையே சிந்தை செய்பவரும் ஆகிய அந்தணர் வாழ்கின்ற நல்ல நாடு எவ்வாற்றானும் கேடுறுதல் இல்லை. அதனை ஆள்கின்ற அரசனும் நலம்பெற்று வாழ்வான். அந்தியிலும், ஏனைச் சந்தியா காலங்களிலும் வேள்விகள் குறைவின்றி நடைபெறும்.
Special Remark:
`அந்தணர்` என்னும் சொற்பொருள் `அம் தணர்` எனவும், `அந்த அணர்` எனவும் பிரித்து இருவகையாகக் கூறப் படுதலை முறையே பரிமேலழகர் உரையிலும் (திருக்குறள் 30) நச்சினார்க் கினியர் உரையிலும் காண்க (திருமுருகாற்றுப்படை - 96. மதுரைக் காஞ்சி - 474, கலி கடவுள் வாழ்த்து). இவ்விருபொருளும் இங்குக் கூறப்பட்டவாறு அறிக. `நரபதி` என்பது வடசொல்லாதலின்; அஃறிணை முடிபு ஏற்றது. அந்தியும் சந்தியேயாயினும் சந்தியாதற்குச் சிறப்புப் பற்றி வேறெடுத்து ஓதினார். ``பண்ணும்`` என்பது `பண்ணப்படும்` என்னும் பொருட் டாய் நின்றது; ``எண்ணும் அஞ்செழுத்தே`` (சிவஞானபோதம் சூ. 9) என்பதிற்போல. ``நாடாயினும், காடாயினும், அவலாயினும், மிசையாயினும் எவ்வழி மக்கள் நல்லரோ அவ்வழியே நிலனும் நல்லதாம்`` (புறம் - 187) ஆகலின், நல்ல அந்தணர் வாழும் நாடு நலமிகப் படைத்தலை அறிந்து கொள்க. திருவள்ளுவரும் இக்கருத்தே பற்றி, `தள்ளாவிளையுள் முதலிய வற்றோடு, தக்காரை உடையதே நல்ல நாடு` (குறள் -731) என்றார்.