
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 15. அந்தணர் ஒழுக்கம்
பதிகங்கள்

நூலுஞ் சிகையும் நுவலிற் பிரமமோ
நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்
நூலுடை அந்தணர் காணும் நுவலிலே.
English Meaning:
Do thread and tuft alone prove the Brahmin state?The thread is but cotton and the tuft but hair;
The true thread Vedanta is, the true tuft knowledge
These the Brahmins truly see, these virtues to them belong.
Tamil Meaning:
முப்புரிநூலை விடாது அணிகின்ற அந்தணர்களே, ஆராய்ந்து சொல்லின், நீவிர் கொண்டுள்ள முப்புரி நூலும், குடுமியுமே பிரமமாகிவிடுமோ! நூல் பஞ்சும், சிகை மயிருமேயாம். உண்மையைச் சொல்லுமிடத்து, நூலாவது வேதத்தின் ஞானகாண்டச் செய்யுட்களே. நுண்ணிய சிகையாவது, அச் செய்யுட்களின் பொருள் தெளிவே; இதனை அறிந்துகொள்ளுங்கள்.Special Remark:
இங்ஙனமாகவே, `முப்புரி நூலாகிய பஞ்சு நூல், அறிவு நூலாகிய வேதாந்தத்தைக் குறிக்கும் அடையாளமும், சிகை, அதன் முடிந்த பொருளைக் குறிக்கும் அடையாளமுமேயாய் அந்தணக் கோலத்திற்கு உரியவாயின. அப்பொருளைப் பெறாதவர் அவற்றைக் குறிக்கும் அடையாளமாகிய வேடமாத்திரங்கொள்வதால் அந்தண ராகி விடமாட்டார்` என்றதாயிற்று.இங்கும் பிரமஞானத்தையே ஒற்றுமை பற்றிப் பிரமமாகக் கூறினார். இங்குக் கூறிய பிரமஞானம் இல்லாதோர் வேட மாத்திரத்தால் பிராமணராகார் என்றவாறு. திருநாவுக்கரசரும்,
கோலும் புல்லும் ஒருகையிற் கூர்ச்சமும்
தோலும் பூண்டு துயரமுற் றென்பயன்
நீல மாமயி லாடு துறையனே
நூலும் வேண்டுமோ நுண்ணுணர்ந் தோர்கட்கே.
-தி.5 ப.39. பா.8
என்பதனால், `முப்புரிநூல் முதலிய வேடம் புனைந்தும் அபர ஞான பரஞானங்களில்லாதார் அந்தணராதல் இல்லை` எனவும், `அந்த ஞானங்களை உடையவர், முப்புரிநூல் முதலிய வேடங்கள் இன்றியும் அந்தணராவர்` எனவும் அருளிச்செய்தார். எனினும், நூலும், சிகையும் போல்பவை கலியூழிக் காலத்தில் பிறப்படை யாளமேயாயின. கார்ப் பாசம் - பஞ்சு. கேசம் - தலைமயிர். சிறப்புடைய இவை இரண்டன் உண்மையைக் கூறவே, கோவண உடை முதலிய பிற அடையாளங் களின் உண்மையும் உணர்ந்து கொள்ளப்படும் என்க. இங்குக் கூறப் பட்ட பொருள் இன்றிப் பிறப்பு ஒன்றே காரணமாக வேடமாத்திரம் புனையும் பிராமணர் பிராமணராகாது, பிராமணப் போலிகள் ஆவர் என்பதனை இந்நாயனார், ``பேர்கொண்ட பார்ப்பான்`` (தி.10 2ஆம் தந்திரம்) எனப் பின்னர்க் கூறுவார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage