
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து
பதிகங்கள்

அம்பலம் ஆடரங் காக அதன்மீதே
எம்பரன் ஆடும் இருதாளின் ஈரொலி
உம்பர மாம் நாதத்து ரேகையுள்
தம்பத மாய்நின்று தான்வந் தருளுமே.
English Meaning:
Siva-StateThe Spaces Vast are His dance arena,
Upon that my Paran dances;
The radiance of His twin Feet
Ascends to heavens high,
And reaches to Five-lettered Nada`s point;
He does descend to you and bless you,
His Siva-State confer on you.
Tamil Meaning:
எம் இறைவனாகிய சிவன், தில்லைத் திருவம் பலத்திலே ஆடும் அரங்கமாகக் கொண்டு அதன்கண் ஓய்வின்றி ஆடுவான். அவனது வலம், இடம் ஆகிய இரண்டு திருவடி களினின்றும் எழும் கழல் சிலம்பின் ஓசைகள் முறையே நாதமும், விந்துவுமாய் நிற்கும். அவை பரநாத பர விந்துக்களாம். அவையே அவற்றின் கதிர்களாகிய `அபர நாதம், அபர விந்து, சாதாக்கீயம், ஈசுரம், சுத்தை வித்தை` என்னும் ஐந்து தத்துவங்களில் அவற்றின் நிலைமையவாய் நிற்க, சிவனும் அம்முறையால் உயிர்களிடத்துப் பொருந்தி அவற்றிற்கு அறிவைத் தருவான்.Special Remark:
`உப்பாம்` என்பது எதுகை நோக்கி மெலிந்து நின்றது. உகரச் சுட்டு மேலிடத்தை உணர்த்திற்று. ``பரமாம் என்பதன்பின், `அவை` என்னும் சுட்டு வருவித்து, ``நின்று`` என்பதனை, `நிற்க` எனத் திரிக்க. `இவ்வாற்றால் யாது சொல்லப்பட்டது` எனின், தில்லைப் பெருமான் திருக்கூத்தினின்றே பரநாத பர விந்துக்கள் தோன்றி, சிவம், சத்தி முதலிய சிவதத்துவம் ஐந்திலும் அவற்றிற்கு ஏற்ற வகையில் பொருந்தி நின்று உயிர்களுக்கு அறிவை உண்டாக்குகின்றன` என்பது சொல்லப்பட்டதாம். இவ்வாறு அறிவைத் தருகின்ற நடனம், `அதி சூக்கும நடனம்` என்றும், `பர நடனம்` என்றும், `அது புருவ நடுவில் நிகழும்` என்றும் சொல்லப்படுகின்றது.``நாதத்து ரேகை`` என்பதில் நாதம், பரநாதம், அதனைக் கூறவே பரவிந்துவும் உடன் கொள்ளப்பட்டது. ரேகை - கதிர், என்றது கூற்றினை. சிவ தத்துவங்கள் வித்தியா தத்துவங்களைச் செலுத்த, உயிர்களுக்கு அறிவு பொதுவகையான் நிகழும். பின்பு வித்தியா தத்துவங்கள் அந்தக் கரணங்களைச் செலுத்த அறிவு அவ்வப் பொருள்கள் மேல் சிறப்பு வகையால் நிகழும் `இவ்வாற்றால் இறைவன் உயிர்களுக்கு அறிவைப் பிறப்பிக்கின்றான்` என்பதும், `அவ்வாறு பிறப்பித்தலே அவனது பர நடனம்` என்பதும் சைவ தத்துவங்களாதலை நாயனார் இம்மந்திரத்தால் உணர்த்தியருளினார்.
இதனால், தில்லைத் திருக்கூத்தே உயிர்களுக்கு அறிவைப் பிறப்பிக்கும் கூத்தாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage