
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் 14. பொற்றில்லைக் கூத்து
பதிகங்கள்

மேதினி மூவேழ் மிகும்அண்டம் மூவேழு
சாதக மாகும் சமயங்கள் நூற்றெட்டு
நாதமொடு அந்தம் நடனாந்தம் நாற்பதம்
பாதியோ டாடும் பரன்இரு பாதமே.
English Meaning:
Dance EnsembleThe universes seven;
The worlds thrice seven;
The religions a hundred and eight
—That the path to God show;
The heavenly states of Bliss four,
—Nada, Nadanta, Natana, Natananta—
The Sakti that is His Half;
With them all,
Para`s Holy Feet danced and danced.
Tamil Meaning:
நில அண்டத்தின் பகுதி மூவேழும், அவற்றிற்கு மேல், `நீர் முதலிய பூதம் நான்கு, அகங்காரம், புத்தி, பிரகிருதி` என்னும் தத்துவ அண்டங்கள் ஏழும் உண்மை வீட்டிற்கு வழியாகின்ற உபநிடத நூல்கள் நூற்றெட்டும், இன்னும் அராகம் முதல் நாதம் முடிவாய் உள்ள தத்துவ புவனங்களும் ஆகிய அனைத்தும் சிவனது திருக்கூத்தின் எல்லையையே எல்லையாக உடையன. இனி உயிர்கள் அடையும் சாலோக, சாமீப, சாரூப, சாயுச்ய முத்திகளும் மாதுடன் ஆடும் சிவனது திருவடி நிலைகளேயாகும்.Special Remark:
நில அண்டப் பகுதி மூவேழாவன, கீழுலகம் ஏழு, நிலப்பரப்பின் தீவுகள் ஏழு, மேலுலகம் ஏழு, புவனங்களை நோக்கும் பொழுது தன்மாத்திரை, கன்மேந்திரியம், ஞானேந்திரியம், மனம். இவை அகங்காரத்தில் அடங்குதலைச் சிவஞான யோகிகளது இரண்டாம் சூத்திர மாபாடியத்துப் பிரதிட்டாகலை விளக்கத்தில் காண்க. வேதாந்த சித்தாந்த நூல்களே உண்மை ஞான நூல்களாதல் பற்றி அவைகளையே `சாதகம்` எனக்கொண்டு, அவற்றுள் வேதாந்த நூல்களையே சமய நூல்களாகச் சுட்டினார். `சமயம்` என்றது சமய நூல்களை. ஒடு, எண் ஒடு. அதன் இயல்பு ஓரிடத்தில் நின்றே ஏனையிடத்தும் இயைதல் ஆதலை அறிக. அந்தம், இங்கு எல்லை. முன் நின்ற அந்தம் மேதினி முதலிய பிறவற்றோடும் சென்றியையும். `மேதினி யந்தமொடு, மூவேழ் அந்தமொடு` என இவ்வாறு எண்ணி, ``நடனாந்தம்`` என்பதனோடு முடிக்க. ``பதம்`` என்றது முத்தியை, ``பாதி`` என்றது பாதியாய் இருப்பவனை.இதனால், அனைத்தும் திருக்கூத்துள் அடங்குதல் பொது வகையால் கூறப்பட்டதாயினும், கருத்து வகையால் தில்லைக் கூத்துள் அடங்குதலே கூறப்பட்டதாம்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage