ஓம் நமசிவாய

மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்  

பதிகங்கள்

Photo

வளியினை வாங்கி வயத்தில் அடக்கில்
பளிங்கொத்துக் காயம் பழுக்கினும் பிஞ்சாம்
தெளியக் குருவின் திருவருள் பெற்றால்
வளியனும் வெட்ட வெளியனு மாமே. 

English Meaning:
If you control the breath within,
However old your body,
Young and crystal-hard it turns
And with the goodly Guru`s benign Grace,
Well may you become lighter than air.
Tamil Meaning:
ஒருவன் தன் பிராண வாயுவை வளைத்துத் தன்வயப்படுத்தி ஆள வல்லனாயின், ஆண்டுகள் பல செல்லினும் அவனது உடல் முதுமை எய்தாது, பளிங்குபோல அழகிதாய் இளமை யுற்று விளங்கும். அந்நிலையில் அவனது உணர்வு தெளிவு பெறுதற்கு ஞான குருவின் அருளைப் பெறுவானாயின், அவன் சாந்தி, சாந்தி யதீத கலைகளில் உள்ள புவனங்களை அடையும் அபர முத்தி நிலைகளை அடைவான்.
Special Remark:
எனவே, `யோக முதிர்ச்சி, ஞானத்தின் பயனை எளிதில் தரும்` என்றவாறாம். உடல் நெடுநாள் நிற்றற்குப் பயன், பிறிது பிறவி வேண்டாது, எடுத்த பிறவியிலே ஞானத்தைப் பெறுதலாம். இவ் வாறன்றி, அணிமாதி அட்ட சித்திகளையும், பிறவற்றையுமே யோகத் தின் பயனாகக் கொள்வோர், உபாய யோகிகளேயன்றி, உண்மை யோகிகள் அல்லர்; அவர்க்கு வினையும், அதன் விளைவாகிய பிறப்பும் நீங்கா என்க.
`யோக சாக்கிரம், யோக சொப்பனம், யோக சுழுத்தி, யோக துரியம், யோக துரியாதீதம்` என்னும் யோகாவத்தை ஐந்தனுள் இயமம் முதல் பிராணாயாமம் ஈறாக உள்ளவை யோக சாக்கிரம். பிரத்தி யாகாரம் முதலாக உள்ள நான்கும் முறையே யோக சொப்பனம் முதலிய நான்குமாம். ஆகவே, `யோக சாக்கிரத்தின் முதிர்வாகிய பிரணாயாமம் கைவந்தோர் ஏனைய நான்கையும் அடைதல் தப்பாது` என்பது பற்றி இதனையே யோக முடிவுபோல வைத்துக் கூறுதல் வழக்கு. அம் முறையே பற்றி நாயனாரும் ஈண்டே யோகத்தின் பயனைக் குறித்தருளினார். `பழுக்கினும்` என்றது, `ஆண்டளவையால் முதுமை பெறினும்` என்றவாறு. `பழுக்கினும், காயம் பளிங்கொத்துப் பிஞ்சாம்` என மாறிக் கூட்டுக. `முதிரினும்` என்னாது ``பழுக்கிலும்`` என்றதனால், `முதுமை வந்தபின் இது செய்யினும் அது நீங்கும்` என்பது கொள்க. குரு, ஞான குரு ஆதல், யோகிகட்கு ஏனைக் குரு வேண்டாமை பற்றி அறியப்படும். ``வளி, வெளி`` என்பவை சாந்தி, சாந்தியதீத கலைகளைக் குறித்து நின்றன. இவ்வாறன்றி, வாயுத் தம்பனமும், ஆகாயத் தம்பனமும் வல்லராதற்கு ஞான குரு வேண்டாமை அறிக. ஈற்றடியைப் பிறவாறு ஓதுவன பாடம் அல்ல.
இதனால், பிரணாயாமம் யோகத்தின் சிறப்புறுப்பாய்ப் பயன் தருதல் கூறப்பட்டது.