
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
பதிகங்கள்

ஆரியன் அல்லன் குதிரை இரண்டுள
வீசிப் பிடிக்கும் விரகறி வாரில்லை
கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால்
வாரிப் பிடிக்க வசப்படுந் தானே.
English Meaning:
Great is JivaHe has steeds two,
But he knows not how to master them
If the lordly Guru lends His Grace,
The steeds will tame become.
Tamil Meaning:
எல்லா மக்களிடத்தும் ``நல்லன்`` என்றும், ``அல்லன்`` என்றும் இரண்டு குதிரைகள் உள்ளன. அவைகளைக் கடிவாளம் இட்டு அடக்குதற்குரிய சூழ்ச்சியை அறிகின்றவர் அவருள் ஒருவரும் இல்லை. அறிவுத் தலைவனாகிய குருவின் அருளால் அச்சூழ்ச்சியை அறிந்து அதன்வழி அடக்கினால், அக்குதிரைகள் இரண்டும் அடங்குவனவாம்.Special Remark:
``ஆரியன்`` என்றது, `நல்லன்` என்னும் பொருளது. ``ஆரியன், அல்லன் என்பன`` இயற்பெயர்த் தன்மையவாய் விரவி, அஃறிணைக்கண் வந்தன. மேல், ``குதிரை ஒன்று உண்டு`` என்று கூறி, இங்கு, ``குதிரை இரண்டுள`` என்றது, `இடவகையால் இரண்டு` என்னும் குறிப்பினதே யாதலின், மாறு கொள்ளாது என்க. எனவே, `ஒன்று` எனப்பட்ட பிராணவாயு, `இடைகலை, பிங்கலை என்னும் இரண்டு நாடிகளின் வழி இரண்டாய் இயங்கும்` என்பது கூறப் பட்டதாம். இடைகலை நாடி, வலக்கால் பெருவிரலினின்று தொடங்கி மேலேறிப்படரும். பிங்கலை நாடி இடக்கால் பெருவிரலினின்று தொடங்கி மேலேறிப் படரும்; இவை இரண்டும் கொப்பூழில் பிணைந்து இடைகலை இடப்பக்கமாகவும், பிங்கலை வலப்பக்க மாகவும் மாறி, முதுகு, பிடர், தலை வழியாகச்சென்று, முறையே மூக்கின் இடத் துளை வலத் துளைகளில் முடியும். அதனால் இரு நாடிகளும் பிணையும் இடமாகிய உந்தியில் (கொப்பூழில்) மூக்கின் வழியே அந்நாடிகளின்வழி வந்து நின்ற காற்று, மீளவும் அவற்றின் வழி வெளிச்செல்லும். அதனால், பிராணவாயு ஒன்றே இரண்டாகச் சொல்லப்படுகின்றது என்க. கடிவாளம், உயிர்க்கிழவனது ஆற்றல். அதனை வீசி அக்குதிரைகளை அடக்க வேண்டும் என்றார். அது தன்னை முறையறிந்து செய்ய வேண்டுதலின், ``அறிவார் இல்லை`` எனவும், ``குருவின் அருளால் அறிந்து பிடிக்க`` எனவும் கூறினார். ``கூரிய`` என்றதில், ``கூர்ப்பது அறிவு`` என்க. இனி, `அம்முறைதான் அசபா மந்திரத்தால் ஆவது` என்பதை, நான்காந் தந்திரத்துட் கூறுவார். இதனுள், `வீசி` என்பது உயிரெதுகை.இதனால், `பிராணாயாமம் செய்யும் முறையைக் குருவருளால் அறிந்து செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage