
ஓம் நமசிவாய
மூன்றாம் தந்திரம் - 5. பிராணாயாமம்
பதிகங்கள்

பிராணன் மனத்தொடும் பேரா தடங்கிப்
பிராணன் இருக்கிற் பிறப்பிறப் பில்லை
பிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்
பிராணன் அடைபேறு பெற்றுண் டிரீரே.
English Meaning:
Let Prana merge in MindAnd together the two be stilled
Then no more shall birth and death be;
Therefore, learn to direct breath
In streams alternating left and right
Then shall you taste the nectar of life.
Tamil Meaning:
பிராண வாயுவால் கிளர்ச்சியுற்று ஓடும் இயல் புடைய மனத்தை உடன்கொண்டு, அப்பிராண வாயு வெளியே ஓடாது உள்ளே அடங்கி இருக்குமாயின், பிறப்பு இறப்புக்கள் இல்லா தொழியும். ஆகவே, அந்தப் பிராண வாயுவை அதன் வழியினின்றும் மாற்றி வேறு வழியில் செல்லச் செலுத்தி, அதனால் மோனநிலையை எய்தி, பிராண வாயுவால் அடையத்தக்க பயனை அடைந்து இன்புற்றிருங்கள்.Special Remark:
மனம் செயற்பட்டுப் பயன் தருதற்பொருட்டு அமைந்ததே பிராண வாயுவாயினும், இங்கு நுதலிய பொருள் பிராண வாயு ஆதல் பற்றி அதனைத் தலைமைப் பொருளாக வைத்து, `மனத் தொடும் அடங்கிப் பிராணன் பேராது இருக்கின்` என்றார். ``மனத் தொடும்`` என்றதில் ஓடு, `கைப்பொருளொடு வந்தான்` என்றாற்போல உடைமைப் பொருட்கண் வந்தது. எனவே, பிராணாயாமத்தால் மனம் அடங்குதலாகிய பயன் கூறப்பட்டதாம். வழியை `மடை` என்றது, ஒப்புமை வழக்கு.பிராண வாயு உலாவும் வழி இட நாடி (இட மூக்கு) ஆகிய இடைகலையும், வல நாடி (வல மூக்கு) ஆகிய பிங்கலையும், நடு நாடி (முதுகந்தண்டைச் சார்ந்துள்ள வழி) ஆகிய சுழுமுனையும் என மூன்று. அவற்றுள் பிராணவாயு இயல்பாக உலாவும் வழி இடைகலை பிங்கலைகளாம். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்து தலையே, ``மடை மாற்றி`` என்றார். `நடை மாற்றி` என்னாது, `மடை மாற்றி` என்றதனால், அதற்கு, `இடைகலை பிங்கலைகளுள் ஒன்றின் வழியாகவே விடுதலும் வாங்குதலும் செய்தல்` என உரைத்தல் கூடாமை அறிக. `பேச்சறுதல்` என்பது, `மோனம்` என்பது குறித்த வாறு. உண்மை மோனம், வாய் வாளாமையோடு ஒழியாது மனம் அடங்குதலேயாம் என்க. உண்ணுதல் இங்கு, துய்த்தல். இத்திருமந்திரம் சொற்பொருட் பின் வருநிலை.
இதனால், பிராணாயாமத்தால் மன அடக்கம் உளதாதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage