
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்
பதிகங்கள்

பரஞ்சோதி யாகும் பதியினைப் பற்றப்
பரஞ்சோதி என்னுட் படிந்ததன் பின்னைப்
பரஞ்சோதி யுள்நான் படியப் படியப்
பரஞ்சோதி தன்னைப் பறையக்கண் டேனே.
English Meaning:
Behold Transcendental Light (Param Jyoti)As I clung to the Lord that is Transcendental Light,
The Transcendental Light in me entered and remained;
And as I sank and sank into the Transcendental Light,
I beheld the Transcendental Light,
Himself aloud proclaiming.
Tamil Meaning:
முன் மந்திரத்தில், ``உள்ளுறும் சோதி`` எனப்பட்ட அந்த மேலான ஒளி என் உள்ளத்துள்ளே தோன்றியவுடன் நான் அதனைச் சிக்கெனப் பிடித்தேன். பிடித்தபொழுது முதற்கண் அஃது என்னுள்ளே அடங்கப் பின்பு நான் அதனுள்ளே தோய்ந்தேன். தோயத் தோய, அஃது எல்லையின்றி விரியக் கண்டேன்.Special Remark:
`பதியாகும் பரஞ்சோதியை` என மாறிக் கூட்டி உரைக்க. உதயம் உள்ளத்துள் ஆதலின், `முதற்கண் அஃது என்னுள் படிந்தது` என்றும், விறகினின்றும் தோன்றிய தீ பின் அவ்விறகைக் கதுவுமாறுபோல, ஆன்ம அறிவில் தோன்றிய சிவஒளி பின்பு அவ்வறிவை விழுங்கி நிற்றல் பற்றி, `பின்பு நான் அதனுட் படிந்தேன்` என்றும், முன்பு சுட்டுணர்வாய் நின்ற ஆன்ம அறிவு பின்பு வியாபக அறிவாய் விரியுந்தோறும் சிவஒளி அவ்வறிவிற்கு வியாபகமாயே விளங்குதல் பற்றி, `அதனைப் பறையக் கண்டேன்` என்றும் கூறினார். பறைதல் - பறத்தல். அஃது இங்கு வியாபித்தலைக் குறித்தது. இனி, `பறைதல், சொல்லுதல்` எனக் கொண்டு, அஃதாவது, தன்னியல்பை அறிவித்தல்` என்பாரும் உளர். தன், சாரியை. ``பறைய`` என்னும் செயவென் எச்சம், `பறையும்பொழுதில்` எனக்காலம் உணர்த்தி நின்றது. இதனுள்ளும் முன் மந்திரத்திற் போந்த அணியே வந்தது.இதனால், சொரூப உதயத்தின் படிநிலைகள் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage