
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 19. சொரூப உதயம்
பதிகங்கள்

சமையச் சுவடும் தனைஅறி யாமல்
கமையற்ற காமாதி காரணம் எட்டும்
திமிரச் செயலும் தெளியுடன் நின்றோர்
அமரர்க் கதிபதி யாகிநிற் பாரே.
English Meaning:
When Jnana Supreme is AttainedKnowing not the foot-prints of Faith`s Way,
They the eight causal sins of greed lust and others
comming,
They are egoity possessed;
They who transcend these,
And Jnana attain,
Verily become Lord of Immortals in High Heavens.
Tamil Meaning:
ஒவ்வோர் உயிரும் தன்னைத் தான் அறியக் கடமைப் பட்டவை. அவற்றை அவ்வாறு அறியச் செய்யாமல் மயங்கச் செய்வன, புறச் சமய நூல்களும், அடக்கம் இன்றி, வேண்டியவாறே ஒழுகத் தூண்டும் காமம் முதலிய குற்றம் எட்டும், அவற்றுக்குக் காரணமான ஆணவ மலமும் ஆகும். அவை முற்றாக நீங்குமாறு ஞான குருவைப் பிரியாது அவரது நிழல்போல உடன் இருப்பவர் வானவர்க்கும் தலைவராவர்.Special Remark:
சுவடு - எழுத்தின் வரிவடிவம். அவற்றை உடையது சுவடி. எனவே சுவடிகளில் உள்ள எழுத்துக்களை, ``சுவடு`` என்றார். `தனை அறியாமற் செய்யும்` என ஒரு சொல் வருவித்து, அதனை முதலிற் கூட்டுக. கமை - பொறுமை. அஃது அடக்கத்தைக் குறித்தது. `ஆணவ மலத்தின் காரமயம் எட்டு` என்பதை,``... ... ... ... விகற்பம், கற்பம்,
குரோதம், மோகம், கொலை, அஞர், மதம், நகை``3
என்னும் இருபா இருபஃதால் அறிக. இவற்றுள் `மோகம்` என்பதனையே தலையாயதாக எடுத்து, ``காமம்`` என்றார். இனி, காமம் முதலிய அறுபகைகளோடு, `மண், பொன் இரண்டு கூட்டி, `எட்டு` என்பாரும், `இடும்பை, அசூயை, இரண்டு கூட்டி `எட்டு` என்பாரும் உளர். திமிரம் - இருள்; அணவ மலம். ``செயல்`` என்றது எட்டொழிந்த பிறவற்றை அவை மறைப்பு. திரிப்பு முதலியன. `தெளிய` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. `குருவுடன்` என்பது அதிகாரத்தால் வந்தது. தலைவராதல், மேல் நிலையில் நிற்றல்.
இதனால், சொரூப உதயத்தாலே உயிர் தூய்மை பெறுதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage