
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து
பதிகங்கள்

காளியோ டாடிக் கனகா சலத்தாடிக்
கூளியோ டாடிக் குவலயத் தேஆடி
நீடிய நீர்த்தீக்கால் நீள்வானத் தேயாடி
நாளுற அம்பலத் தேஆடும் நாதனே.
English Meaning:
How He Dances in Golden HallHe dances with Kali;
He dances in the Golden Hall;
He dances with Demons;
He dances in the world;
He dances in water, fire, wind and sky
He dances in the Temple Holy day after day
He, the Lord Supreme.
Tamil Meaning:
சிவன், படைப்புக் காலத்தில் உயிர்களைக் காளியின் பிடியிலிருந்து விடுவித்தற்கு அவளோடு நடனப் போட்டி யிடும் முறையில் நடனம் ஆடி அவளை வெள்கச் செய்து வென்றான். பின்பு தேவர்கள் கண்டு தனது முதன்மையை உணர்ந்து உய்தற் பொருட்டு அவர்கள் முன் மேரு மலையில் நடனம் ஆடினான். பின் நில உலகில் சுடலைகளில் பேய்களோடு கூடி நடனம் ஆடினான். பஞ்ச பூதங்களில் எப்பொழுதும் ஒருவரும் அறியாதபடி நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றான். அவன் பொற்பதிகளில் உள்ள அம்பலங்களில் யாவரும் காண, எந்நாளும் ஆடிக்கொண்டிருக்கின்றான்.Special Remark:
`அவ்வருமை யறிந்து அப்பதிகளில் சென்று அந்த நடனத்தை வணங்குதல் மானிடர்க்குக் கடன்` என்பது குறிப்பெச்சம்.`காளி, தாருகன்` என்னும் அசுரனை அழித்து அவனது குருதியைக் குடித்த காரணத்தால், அவனைப் போலவே உலகை அழிக்கத் தொடங்கியபொழுது சிவன் அவளோடு நடனப்போர் செய்து அவளது சினத்தை அடக்கினான்` என்பது புராண வரலாறு.
``நீடுயர் மண்ணும் விண்ணும் நெடுவேலை குன்றொடு
உலகேழும் எங்கும் நலியச்
சூடிய கையராகி இமையோர் கணங்கள்
துதிஓதி நின்று தொழலும்
ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்தும்
ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மாநடத்து எம் அனலாடி பாதம்
அவையாம் நமக்கொர் சரணே``
என்னும் அப்பர் திருமொழிக் குறிப்பைக் காண்க. தாருகன் - ஆணவ மலம். அவனை அழித்த காளி - மாயை. சிவன் அவனது கோபத்தை அடக்கியது. மாயையின் மயக்கத்தை நீக்கியது. எனவே, உயிர்களைக் கேவல சகலங்களின் நீக்கிச் சுத்தத்தை அடையச் செய்தலே சிவன் செய்யும் திருக்கூத்து` என்பது விளங்கும். காளியோடு நடனம் ஆடிய ஐதிகத்தைக் குறிப்பதே திருவாலங்காட்டுத் தலம். எனவே, அவ்விடத்து நடனமே பழைய நடனம் ஆதல் விளங்கும்.
தேவர்கள் காண மேருமலையில் ஆடியதை இம்மந்திரத்தால் அறிகின்றோம்.
சிவன் சருவ சங்காரத்தின் பின் உடல்அற்ற உயிர்களோடு கூடி நடனம் ஆடுதல் அறியாதார் உலகத்தில் பேய்களோடு கூடிச் சுடுகாட்டில் ஆடுவதாக எண்ணுவர். அவர்தம் மனப்பான்மை பற்றி அதனையும் சிவன் உடன்பட்டுக் கொள்கின்றான். `குவலயத்தக் கூளியோடு ஆடி` என ஒரு தொடராக ஓதற்பாலதனை இரண்டு தொடராகப் பிரித்து ஓதினார். சிவனது செயல்கள் எல்லாம் அவனது திருக்கூத்தாகவே கூறப்படுதல் பற்றி. அவன் பஞ்ச பூதங்களைச் செயற்படுத்தி நிற்றலையும் அவனது திருக்கூத்தாகக் கூறினார். `எத்துணைப் பெரியோன் எத்துனை எளியனாய் வந்து பொற்பதிகளில் ஆடுகின்றான்` என்பதை விளக்குதற்கு அவனது பெருநடனங்கள் பலவற்றையும் எடுத்தோதினார். மூன்றாம் அடி உயிரெதுகை பெற்றது.
இதனால், பொற்பதிக் கூத்தின் அருமை உணர்த்தப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage