
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து
பதிகங்கள்

தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்
வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்
ஓட்டறும் ஆசை அறும் உளத் தானந்த
நாட்டம் முறுக்குறு நாடகம் காணவே.
English Meaning:
When They Witness Holy DanceWorld-seeking you no more hanker after;
No more bewildered are your thoughts;
Sorrows harass not your body within;
Your breath will be trained in the Yogic way;
Your senses controlled from straying away;
All desires are rid;
The heart elates in bliss-seeking;
Thus it is,
When the Holy Dance they witness.
Tamil Meaning:
காண்பவரது உள்ளங்களில் சிவானந்த நாட்டத்தையே முறுகி வளரச் செய்கின்ற பொற்பதிக் கூத்துக் கண்டவுடன் கண்டவர்களது சித்தம் வேறு எதனையும் சிந்தியாது; அந்தத் திருக்கூத்து ஒன்றை மட்டுமே சிந்திக்கும். உயிர்ப்பினால் பொறிகள் வழியாகப் புலன்களின்மேல் செல்வனவாய ஏனைய அந்தக் கரணங்களும் அவ்வாறு செல்லமாட்டா. (``அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆக``* என்ற அனுபவத்தை நினைவு கூர்க.) அங்ஙனமாகவே, உலக ஆசைகள் பலவும் அற்றொழி வனவாம். அவை ஒழியவே உலகப் பொருள்களைத்தேடி, அவை கிடையாமையால் மனம் திகைத்தலும், தேடுதலாலும், திகைத்தலாலும் உடல் இளைத்தலும் நிகழா.Special Remark:
``ஆனந்த நாட்டம்`` என்பது முதலாகத் தொடங்கி, `சிந்தை தேட்டறும்` என மாற்றி, ``திகைப்பறும், பிண்டத்துள் வாட்டறும்`` என்பதை இறுதியில் வைத்து உரைக்க. தேடுதல் - ஆராய்தல். தேடு, தேட்டு - முதனிலை திரிந்த தொழிற்பெயர். `காலால், புந்தியாகி வரும் புலன்மேல் (மனம்) ஓட்டறும்; திகைப்பறும்` என உருபு விரித்து, `மனம்` என்பது வருவிக்க. மனம் பொறிவழிச் சென்று கவர்கின்ற புலன்கள் முடிவில் புத்தியின்கண் வந்து முடிதலின், ``புந்தியாகி வரும் புலன்`` என்றார். `புலன்மேல்` என, `மேல்` என்பது விரிக்க. பிண்டம் - உடல். `வாட்டம்` என்பதில் அம்முக் குறைந்து நின்றது.இதனால், பொற்பதிக் கூத்துக் காண்பவர்க்கு அக்கட்சியே முத்திப் பேரின்பமாதற் சிறப்புக் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage