
ஓம் நமசிவாய
ஒன்பதாம் தந்திரம் - 13. பொற்பதிக் கூத்து
பதிகங்கள்

விம்மும் வெருவும் விழும் எழும் மெய்சோரும்
தம்மையும் தாம்அறி யார்கள் சதுர்கெடும்
செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்
அம்மலர்ப் பொற்பாதத்(து) அன்புவைப் பார்கட்கே.
English Meaning:
Dance Emotions of DevoteesThey sob, they fear, they fall, they rise
Their body exhausted,
Themselves they are unaware of,
Their powers lost;
Thus are they in the Holy Temple dance;
They who in love adore
The Holy Feet of Lord,
Flower-like and golden.
Tamil Meaning:
பொற்பதிகளுள் உள்ள நேர்மை மிகுந்த அம்பலங்களில் நிகழும் திருக்கூத்தில் அழகிய மலரும் பொன்னும் போலும் எடுத்த திருவடியில் தம் அன்பை வைப்பவர்கட்கு அவ்வன்பினால் உடம்பு அழுகையில் விம்மும்; `அதிருவடி எங்கே மறைந்து விடுமோ` என அஞ்சி நடுங்கும்; தந்து அடைக்கல நெறியையும், பிழைபொறுக்க வேண்டுதலையும் இனிது புலப்படுத்த வேண்டி நிலத்தின்மேல் நெடுங்கிடையாய் விழும்; பின்பு திருக்கூத்தினைக் காண வேண்டி எழும்; தளர்ச்சியடையும்; முடிவாக அவர்கள் தம்மையே தாம் மறந்துவிடுவார்கள் என்றால் `தற்பெருமை` என்பது அவர்கட்கு எங்கேயிருக்கப் போகின்றது? அஃது எங்கும் இல்லாது, அறவே கெட்டொழியும்.Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கிப் பின், ``மெய்`` என்பதை ``விம்மும்`` என்பதற்கு முன்னே கூட்டி உரைக்க. ``தம்மையும்`` என்னும் உம்மை சிறப்பு. சதுர் - பெருமை. திருக்கூத்தை அன்போடு தரிசிப்பவர்க்கு இம்மெய்ப்பாடுகள் உளவாதலைத் திருநாவுக்கரசரது வரலாற்றில் சேக்கிழார்,``கையும் தலைமிசை புனைஅஞ் சலியன;
கண்ணும் பொழிமழை ஒழியாதே
பெய்யும் தகையன; கரணங் களும்உடன்
உருகும் பரிவின; பேறெய்தும்
மெய்யும் தரைமிசை விழும்;முன் பெழுதரும்;
மின்றாழ் சடையொடு நின்றாடும்
ஐயன் திருநடம் எதிர்கும் பிடும்அவர்
ஆர்வம் பெருகுதல் அளவின்றால்``
எனக் கூறியவாற்றானும் அறிக.
இன்னும்,
``விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார்;
தம்மாண் பிலராய்த் தரியார்; தலையால் முட்டுவார்;
எம்மான், ஈசன், எந்தை, என் அப்பன் என்பார்கட்கு
அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்``
என்றதையும் காண்க. நேர்மை - மலக்கோண் நீங்கிய திருவருள் நேர்மை.
இதனால், பொற்பதிக் கூத்தினைத் தரிசிப்பார்க்கு உண்டாகும் அனுபவம் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage