
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 43. சோதனை
பதிகங்கள்

நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைபொய் யாதே புனிதனை நாடுமின்
பன்மையில் யாதென நும்மைப் பரிசுசெய்
தொன்மையின் உண்மை தொடர்ந்து நின்றானே
English Meaning:
Lord Will Make You First of ManyHe is of attributes mighty;
The Fruit of Tapas;
All things goody He is;
In the centre of my thoughts He resides;
He is the Great Nandi;
Seek the Holy One in truth unfaltering,
He will place you as the First of Many.
Tamil Meaning:
உயிர்களுக்கு ஆகும் நன்மைகளை யெல்லாம் செய்ய வல்லவனும், அனைத்துயிர்களையும் ஒப்ப நோக்கும் நடுவு நிலையாளனும் இயல்பாகவே பாசங்கள் இல்லாத தூயவனும் ஆகிய சிவபெருமானை நீவிர் புன்மை உண்டாகும்படி பொய்த்தல் இன்றி, உண்மையாக விரும்புங்கள்; விரும்பினால், பல உயிர்களுள்ளும் உம்மை, `இவ்வுயிர் யாது` எனச் சிறப்பாக நோக்கி, நும் செயற்கையை நீக்கி, இயற்கையாகச் செய்து அத்தொன்னிலையில் பின்னும் தொடர்ந்தே நிற்பான்.Special Remark:
`வேறுபடான்` என்பதாம். `புன்மையாக` என ஆக்கம் வருவிக்க. பொய்யாது நாடுதலாவது, வேறுபயன் கருதாது அன்பே காரணமாக விரும்புதல். செயற்கை, பாசத்தோடு கூடிநின்ற நிலை. இயற்கை, பாசத்தின் நீங்கிச் சிவத்தோடு நிற்கும் நிலை இஃதே தொன்னிலை; அனாதி நிலை; உண்மையியல்பு. அதில் தொடர்ந்து நிற்றலாவது, அதினின்றும் மாறுபடாதிருத்தல்.இம்மந்திரம் பதிப்புக்களில் பாடம் பெரிதும் வேறாய்க் காணப்படுகின்றது.
[தன்மைவல் லோனைத் தவத்துள் நலத்தினை
நன்மைவல் லோனை நடுவுறை நந்தியைப்
புன்மைசெய் யாதே புனிதனை நாடுமின்;
பன்மையில் உம்மைப் பரிசுசெய் வானே.]
அடுத்து வரும் மந்திரம், ``தொடர்ந்து நின்றான்`` எனத் தொடங்குதலால், இப்பாடமே கொள்ளப்பட்டது.
இதனால், `மெய்யன்பு சோதனையால் திரியமாட்டாது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage