
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 43. சோதனை
பதிகங்கள்

நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண் டான் கொள்ள
`எந்தைவந் தான்`என்(று) எழுந்தேன் எழுதலும்
சிந்தையி னுள்ளே சிவன்இருந் தானே.
English Meaning:
Lord is in the Heart`s TempleSeated in the centre of Void,
Nandi descended into my heart`s temple,
And there his place took;
And as He descended,
I stood up saying: ``My Father Come;``
Thus as I greeted,
Siva in my thoughts instant stood.
Tamil Meaning:
`பர வியோமம்` எனப்படுகின்ற அருள்வெளியில் உள்ள சிவபெருமான், அங்கு நின்றும் போந்து என் உள்ளத்துள்ளே புகுந்து அதனையே தனது இடமாகக் கொண்டான். கொண்டது எவ்வா றெனில், அவன் எனது உள்ளத்தை நோக்கி வரும்பொழுது, ``வாராத என் தந்தை வருகின்றான்`` என்று நான் பதைத்தெழுந்து எதிர்கொண்டேன். அதனால்தான் அவன் என் உள்ளத்தையே தனது இடமாகக் கொண்டுவிட்டான்.Special Remark:
`வியோமத்து நடுவுள் நின்றும் வந்து` என்க. வியோமம், பரவியோமம். கொள்ள - கொள்ளுமாறு. எழுதல், அதன் காரியத்தைக் குறித்து நின்றது. இருந்தான் - நீங்காது, இருந்தே விட்டான். `தன்னை வரவேற்கும் உள்ளப்பான்மை உள்ளவர்களை நோக்கியே அவன் வருவான்` எனவும், `அங்ஙனம் வந்த பின், அவன் மீண்டு நீங்கிப்போதல் இல்லை` எனவும் கூறியவாறு. ``வருதல் கோயில் கொள்ளல்`` என்பவற்றின் உண்மைப்பொருள், மேல், ``செறியாச் செறிவு``8. என்பதுபற்றிக் கூறியதனால் விளங்கும். `உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கெழுந்தருளுவ தினியே`3 என்பதனானும் இம் மந்திரப் பொருளை உணர்க. ``சிந்தையுட் சிவம தானார் திருச்செம்பொன்பள்ளி யாரே``l என அப்பரும் அருளிச் செய்தார்.இதனால், `சிவனது அருமை பெருமைகளை எந்நிலையிலும் அயராது உணர்ந்திருத்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage