
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 43. சோதனை
பதிகங்கள்

குறியாக் குறியினில் கூடாத கூட்டத்(து)
அறியா அறிவில் அவிழ்ந்தே சித்தமாய்
நெறியாம் பராநந்தி நீடருள் ஒன்றும்
செறியாச் செறிவே சிவம்என லாமே.
English Meaning:
Merge in God`s PervasivenessInto the Goal beyond goals,
Into the Assembly where none assemble,
Into the Knowledge beyond knowledge,
I loosened myself,
In single-minded thought;
I merged in Holy Nandi`s Grace,
There in Pervasiveness beyond pervasiveness Was Siva.
Tamil Meaning:
குறியாக் குறி - தற்போதத்தால் தானே கொள்ளாது, குரு கொள்வித்தபடி கொண்ட இலட்சியம் கூடாத கூட்டம் - தற் போதத்தின் வழிச்சென்று புணராது, திருவருள் வழிச்சென்று புணர்ந்த புணர்ச்சி. அறியா அறிவு - தற்போதமாய் நின்று அறியாது, சிவ போதமாய் நின்று அறியும் அறிவு அவிழ்தல் பாசக்கட்டு நீங்குதல் எனவே, `குறியா ... ... அவிழ்ந்து` என்றது ``தானே கொள்ளாது குருவுணர்த்திய இலட்சியமாகிய சிவத்தில், தற்போதத்தால் முயலாது, திருவருள் வழியாக முயன்று ஒன்றுபட்டுபின்னும் அந்தத் திருவருளாலே அஃதொன்றையே அறிந்து நிற்குமாற்றால் பாசங்கள் நீங்கப்பெற்று` என்றதாயிற்று. பாசக்கட்டு நீங்கினமையால், பலவாகிய பொய்ப்பொருட்பற்றுத் தொலைய, ஒன்றாகிய மெய்ப்பொருளிடத்தே அன்பு மீதூர நிற்றலால், நன்னெறியாகிய அருட்சத்தியின் முதலாகிய அச்சிவத்தில் அவ்வருளால் அழுந்துதலாகிய இயற்கை இயைபே உண்மைச் சிவ சம்பந்தமாம்.Special Remark:
செறியாச் செறிவு - புதுவதாய்ச் சென்று இயையாது, முன்பே இயல்பாய் இயைந்துள்ள இயைபு, `சிவத்திற்கும், ஆன்மா விற்கும் இடையேயுள்ள அத்துவித சம்பந்தம், முன்பு இல்லாது பின்பு இடையே ஒரு காலத்தில் உண்டாகும் சம்பந்தம் அன்று: அஃது அனாதியேயுள்ள சம்பந்தம்` என்றபடி. எனவே, `சைவம் சிவனுடன் சம்பந்தமாகுதல்`* என்றது, முன்பு உணராதிருந்த அச்சம்பந்தத்தை உணர்தல் என்றதேயாம். `எல்லா உயிர்களிடத்தும் சிவனது அத்துவித சம்பந்தம் இயல்பாக உள்ளமை தோன்றவே, ``நின்றனவும், சரிப்பனவும் சைவமேயாம் நிலைமை அவர்க்கருள்செய்து`` எனக் குறித்தருளினார் சேக்கிழார்.*``சென்றிவன்றான் ஒன்றில், சிவபூ ரணம்சிதையும்;
அன்றவன்றான் ஒன்றுமெனில் அன்னியமாம் -இன்றிரண்டும்
அற்றநிலை ஏதென்னில், ஆதித்தன் அந்தன்விழிக்
குற்றமற நின்றதுபோற் கொள்``*
என்னும் உண்மை விளக்கமும், இதனையே விளக்கிற்று.
பராநந்தி - பரைக்கு முதல்வனாகிய சிவன். `நந்தியின்கண்` எனவும், `நீடு அருளால்` எனவும் ஏற்கும் உருபுகள் விரிக்க. ``சிவம்`` என்றது, அதனோடு சம்பந்தம் ஆதலைக் குறித்தது. ``செறிவே`` எனவும் எனலாமே எனவும் போந்த பிரிநிலையும், தேற்றமும் ஆகிய ஏகாரங்கள், எத்தகைய சோதனையிலும் இந்நிலையினின்றும் சிறிதும் வழுவலாகாமையை உணர்த்தி நின்றன.
இதனால், `சோதனைகளால் சலியாது நிற்றற்குரிய நிலை இது` என்பது கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage