
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 43. சோதனை
பதிகங்கள்

அறிவுடை யான்அரு மாமறை யுள்ளே
செறிவுடை யான்மிகு தேவர்க்கும் தேவன்
பொறியுடை யான்புலன் ஐந்துங் கடந்த
குறியுடை யானொடும் கூடுவன் நானே.
English Meaning:
Seeking Union in GodHe is the Wise One;
He fills Vedas rare;
He is the God of countless Gods;
He is of Divine Sense possessed,
The five senses transcending;
With Him who these attributes has
I my union seek.
Tamil Meaning:
அறியாமையோடு கூடுதல் சிறிதும் இன்மையால், `அறிவுடையான்` எனப்படுதற்கு உரிமையுடையவனும், அரிய பெரிய வேதங்களில் எங்கும் பரவலாகப் போற்றப்படுபவனும், பெரிய தேவர்கட்கும் தேவனும், கண், செவி முதலிய பொறிகளையுடைய னாயினும் அவற்றால் அறியப்படுகின்ற ஐந்து புலன்களில் ஒருபோதும் தோய்வின்றித் தன்னிலையில் திரியாதிருப்பவனும், ஆகிய சிவனோடே யான் என்றும் கூடியிருப்பதன்றிப் பிரிதல் இல்லை.Special Remark:
இறைவனை, ``பொறிவாயில் ஐந்தவித்தான்``* என்றல் அவன் இயல்பாகவே பாசங்களின் நீங்கி நிற்கும் தன்மை யுடைமை பற்றியேயன்றி, ஒரு காலத்தில் பாசத்தையுடையனாயிருந்து பின் நீங்கினவனல்லன் என்பது தோன்ற, ``அறிவுடையான்`` முதலிய மூன்றற்கும் பின்னர் இறுதியில் இதனைக் கூறினார். `இயல்பாகவே பாசங்களின் நீங்கினவன் எவனும் இல்லை` என்பவர், இதனை `ஒரு காலத்தில் புலனைக் கடந்தவனைக் குறிக்கின்றது` என்பர். இஃதே தொல்காப்பியத்துள் ``வினையின் நீங்கி விளங்கிய அறிவின் - முனைவன்``9 எனப்பட்டது. கூடுதல் பிரிவின்மையைக் குறிக்க வந்தது. `இயல்பாகவே பாசங்களால் பற்றப்படாது இருப்பவனைச் சார்ந்திருத்தலால், எம்மைப் பாசங்கள் வந்து அணுகுமாறில்லை` என்பது கருத்து. மிகுதேவர், காரணக்கடவுளர் மூவர். உம்மைகள், சிறப்பு. ``பொறியுடையான்`` என்பதன்பின், `ஆயினும், என்னும் சொல்லெச்சம் வருவிக்க. குறி - தன்னியல்பு. இதனால் மேல்,``பதியணுகின்பசு பாசம்நில் லாவே``3
என்று அருளிச்செய்தபடி, பதியைச் சார்ந்து நிற்கும் உயிரைப் பாசம் பற்ற மாட்டாமைக்குக் காரணம் கூறப்பட்டது.
``சதசத்தாம் மெய்கண்டான், சத்து அருளிற் காணின்
இதமித்தல் பாசத்தில் இன்றிக் - கதம்மிக்(கு)
எரிகதிரின் முன்இருள்போல் ஏலா அசத்தின்
அருகணையார்; சத்தணைவார் ஆங்கு``8
என்றதனை நோக்குக.
(இதன்பின் பதிப்புக்களில் காணப்படும் ``அறிவறிவென்றங் காற்று முகம்`` என்னும் மந்திரம், மேல், ``அறிவுதயம்`` என்னும் அதிகாரத்தில் வந்தது.3)
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage