
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 33. சுத்தா சுத்தம
பதிகங்கள்

கருமங்கள் ஒன்று கருதும் கருமத்(து)
உரிமையும் கன்மமும் உன்னும் பிறவிக்
கருவினை யாவதும் கண்டகன்(று) அன்பிற்
புரிவன கன்மக் கயத்துட் புகுத்துமே.
English Meaning:
Away From KarmasThe Karmas,
The thoughts rights and deeds of Karmas
Are alike the seeds of births to be;
Seeing that,
Away from them;
Will what you do ever after
Reach the Karma Pond?
Tamil Meaning:
உயிர்களால் செய்யப்படும் செயல்கள் யாதேனும் ஒரு பயனைக் கருதிச் செய்யும் செயல்களாகுமிடத்து `அச்செயல்களைச் செய்தோன் அவனே` என்னும் உரிமை தோன்றுதலையும், செய்த செயல்களும், `இனி வரும்` எனக் கருதப்படுகின்ற பிறவிக்கு வித்தாம் ஆகாமியம் ஆதலையும் உணர்ந்து, அச்செயல்களில் பற்று வையாது `எச்செயலையும் செய்யும் வாய்ப்பினை நமக்கு அளித்தவன் சிவன்` என்பதை யுணர்ந்து, அவனிடத்து அன்பு செய்து, எச்செயலையும் அவன் பணியாகச் செய்யின் அம்முறையில் அறிந்தோ, அறியாமலோ நிகழும் செயல்கள் யாவும் வினை நீக்கத்திற்கு வாயிலான தவமாகி, அவற்றைச் செய்தவனை வினை நீக்கத்தில் சேர்ப்பிக்கும்.Special Remark:
ஒன்று ஒரு பயன் `கன்மமும் கருவினை ஆவதும்` என இயையும். `ஆவது` என்பது தொழிற்பெயர். ``கன்மமும்`` என்னும் உம்மை சிறப்பும்மை. உன்னும் - கருதப்படுகின்ற. கரு - முதல். கரு வினை. `இச்செயலை யானே செய்கின்றேன்; இச்செயல்களும், இவற்றால் வரும் பயன்களும் என்னுடையனவே` என்னும் கருத்தே `பற்று` எனப்படுகின்றது. இப்பற்றோடு செய்யும் கருமமே `காமிய கருமம்` எனப்படுகின்றது.இனி, யாதொரு பயனையும் கருதாதவழிச் செயல் செய்வார் ஒருவரும் இலராவர். ஆகவே, `செயல்களைச் செய்தற்கு வேண்டுவன பலவற்றையும் அளித்தவன் இறைவன் ஆகையால், உயிர்கள் செய்யும் செயல்கள் யாவும் `ஈசன் இடும்பணி`* என உணர்ந்து, அவற்றில் - யான், எனது என்னும் பற்றின்றி, ``என்கடன் (அவன்) பணிசெய்து கிடப்பதே``* என்று அவனிடத்து அன்போடும் செய்வதே பயன் கருதாது செய்தலாம். அதனையே இங்கு நாயனார், ``அகன்று அன்பின் புரிவன`` என்றார். இதுவே `நிட்காமிய கருமம்` எனப்படுகின்றது. இந்நிலைமை கடவுட் கொள்கையில்லார்க்கு வாயாது. `க்ஷயம்` என்னும் வடமொழி, தமிழில் `கயம்` என வரும். ஆகவே, கருமக் கயம் - வினை நீக்கமாம். `காமிய கன்ம நிட்காமிய கன்மங்களாவன இவை` என்பதும், அவற்றின் பயன் முறையே பிறப்பும் வீடுமாம்` என்பதும் இம்மந்திரத்துட் கூறப்பட்டமை காண்க.
``காமியம் செய்து காலம் கழியாதே
ஓமியம் செய்தங்கு உள்ளத் துணர்மினோ``*
எனப் அப்பரும் அருளிச்செய்தார்.
இதனால், வினை மாசே உண்மை மாசும், அதன் நீக்கமே உண்மைத் தூய்மையும் ஆதல் கூறப்பட்டது.
``புறந்தூய்மை நீரான் அமையும்; அகந்தூய்மை
வாய்மையாற் காணப்படும்``9
என அருளிச்செய்த திருவள்ளுவர்க்கும் புறத்தூய்மையினும் அகத்தூய்மையே சிறந்தது என்பது கருத்தாதல் தெளிவு, அவர்.
``மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகும் மாந்தர் பலர்``9
என அருளிச்செய்ததும் இங்கு நினைவுகூரற்பாலது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage