
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 16. பதி பசு பாசம் வேறின்மை
பதிகங்கள்

அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆகும்
அறிந்தணு மூன்றும்மெய் யாங்கணும் ஆக
அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன்
அறிந்த பதிபடைப் பான்அங் கவற்றையே.
English Meaning:
The Three Classes of Jivas Created According Degrees of KnowledgeEverywhere are the three Jivas,
Of knowledge possessed;
The timeless Lord of Divine Knowledge, too,
Is everywhere,
Pervading Jivas three;
And so to each according to his desert,
He created them, three.
Tamil Meaning:
மூவகை ஆன்மாக்களும் தாம் தாம் பெற்ற தனு கரணத்தளவாக அறிவு விளங்கப் பெறுதலின், அவை யாவும் `அணு` எனப்படுகின்றன ஆயினும் அவற்றின் உண்மை நிலை பதியைப் போல வியாபகமே. பாசத் தடை நீங்கியபின் உயிர் தனது உண்மை நிலை யாகிய வியாபக நிலையை அடையும். ஆயினும், பதியினது வியாபகத்தில் அது வியாப்பியமேயாம். உயிர்களின் ஏகதேச நிலை, வியாபக நிலை ஆகிய இருநிலைகளும் என்றும் ஒரு பெற்றியனாய் உள்ள பதியே அவைகட்கு ஆவனவற்றைச் செய்துநிற்பான்.Special Remark:
பின் இரண்டடிகளிற்போல `அறிந்த` என வர வேண்டிய பெயரெச்சம் ஈற்று அகரம் தொகுத்தல் பெற்று நின்றது. யாங்களும் ஆதல் வியாபகம் ஆதல். இரண்டாம் அடி அனுவாதம், அனாதி - அனாதியாய சிவன். `அனாதியில்` என உருபுவிரிக்க. உம்மை, சிறப்பு. ``அனாதியில் வியாத்தனும் ஆவன்`` என்றதனால், `முப்பொருள்களும் அதிசூக்கும சூக்கும தூலமாம் முறையால் வியாபக வியாப்பிய வியாத்தியாய் இயைந்து நிற்கும்` என்பது உணர்த்தப்பட்டது. இதுவே ``பதிபசு பாசம் வேறின்மை`` என்க. ``அவற்றையே`` என்னும் பிரிநிலை ஏகாரத்தைப் பிரித்து, `பதியே` எனக் கூட்டுக. `முப்பொருள்களும் வியாபக வியாப்பிய முறையால் சமமாய் நிற்பினும் பதியே சுதந்திரமுடையதாய் ஏனையவற்றை இயக்கி நிற்கும்`` என்றற்கு. `பதியே அங்கு அவற்றைப் படைப்பான்` என்றார். அங்கு அவ்விருநிலைகளிலும். ``படைப்பான்`` என்றது, `எல்லாவற்றையும் செய்வான்` என்னும் குறிப்பு மொழி.இதனால், பதி பசு பாசம் வேரின்மையும், அவற்றுள் பதியே தலைமையது ஆதலும் கூறப்பட்டன.
முன்மந்திரத்தில், `சுத்த சைவத்திலே நந்திமதி தந்து வைத்தனன்` எனக் கூறப்பட்டவற்றில் இவ்வதிகாரத்தில் எடுத்துக் கொண்ட சிறப்புப் பொருளை இதனுள் இவ்வாறு கூறிய நாயனார், இதன் தொடர்பாக மற்றும் சிலவற்றை இங்கும் கூறிகின்றார். அவை மேலே கூறப்பட்டன வாயினும், `பெற்றதன் பெயர்த்துறை நியமப் பொருட்டு` என்னும் முறையால் இவ்வதிகாரத்தில் எடுத்துக்கொண்ட பொருளோடு அவற்றையும் உடன்கூறித் தெளிவிக்கின்றார்.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage